யாகூ இணையத்தளத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஜெர்ரி யாங் இன்று அந்த நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து அமெரிக்க சந்தையில் யாகூவின் பங்கு விலை 3.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
1995ம் ஆண்டு யாகூ நிறுவனத்தை சிலருடன் சேர்ந்து துவக்கினார் யாங். ஆரம்பத்தில் நல்ல நிலையில் சென்று கொண்டிருந்த இந்த நிறுவனம் கூகுளின் அசுர வளர்ச்சியால் அடி வாங்க ஆரம்பித்தது.
இதையடுத்து நிறுவனத்தை யாங் கையாளும் முறை குறித்து பங்குதாரர்கள் அதிருப்தி தெரிவிக்க ஆரம்பித்தனர். இவர் யாகூவின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தபோது தான் அந்த நிறுவனத்தை மைக்ரோசாப்ட் ரூ. 2.3 லட்சம் கோடி விலை கொடுத்து வாங்க முன் வந்தது. ஆனால், விலை போதவில்லை என்று கூறி விற்க மறுத்துவிட்டார் யாங்.
அதே போல சீனாவின் முன்னணி இணையத்தளமான அலிபாபாவில் உள்ள யாகூவின் 40 சதவீத பங்குகளை நல்ல விலைக்கு வாங்க பலர் முன் வந்தபோதும் யாங் விற்க மறுத்துவிட்டார். அதே போல யாகூவின் ஜப்பானிய பிரிவுக்கு முதலீடுகள் வந்தபோதும் அதை ஏற்க மறுத்துவிட்டார்.
மேலும் யாகூவின் லாபத்தை அதிகரிக்க யாங் எடுத்த எந்த நடவடிக்கையும் உதவவில்லை. இப்போது யாகூவின் நிகர மதிப்பு ரூ. 1 லட்சம் கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் விலக வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.
இந் நிலையில் இரு வாரங்களுக்கு முன் ஸ்காட் தாம்சனை நிறுவன செயல் அதிகாரியாக யாகூ நியமித்தது. இதைத் தொடர்ந்து யாங் நேற்று அந்த நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இருந்தும், பிற பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.
அவர் பதவி விலகிய செய்தி பரவியதும், அமெரிக்க சந்தையில் யாகூவின் பங்கு விலைகள் உடனடியாக 3.4 சதவீதம் வரை உயர்ந்தன.
No comments:
Post a Comment