சென்னை மேற்குமாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி . 50 வயது நிரம்பிய இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில், ‘’நான் திருமணம் செய்துகொள்ளாமல் ஆன்மிகத்தில் ஈடுபட்டு வந்தேன். எங்கள் வீட்டு அருகில் உள்ள கோவிலுக்கு தினமும் பஜனைபாடல்கள் பாடசெல்வேன். அப்போது, சினிமா துணை டைரக்டர் ஒருவர் என்னிடம் அன்பாக பழகினார்.
திருமணம் ஆகாமல் இருந்த அவர் திடீரென்று ஒருநாள் என்னை காதலிப்பதாக கூறினார். உங்களுக்கும், எனக்கும் 20 வயது வித்தியாசம் உள்ளது. நாம் காதலிப்பது பொருத்தமாக இருக்காது. உலகமும் அதை ஏற்காது என்று அவரிடம் கூறினேன்.
ஆனால் அவர் காதலில் உறுதியாக இருப்பதாக சொன்னார். திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்தார். ஒருநாள் எனது வீட்டுக்கு வந்து காதலை ஏற்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று நெஞ்சுருக பேசினார்.
நான் எதிர்பார்க்காமல் எனது நெற்றியில் குங்குமத்தை வைத்து இப்போது முதல் நாம் இருவரும் கணவன், மனைவி என்று ஆசையாக என்னை கட்டிப்பிடித்தார். நானும் அன்று முதல் அவரது மனைவியாக வாழ்ந்து வந்தேன்.
தற்போது, அவர் என்னை பார்க்க வருவதில்லை. தலைமறைவாகிவிட்டார். ஒருநாள் கோவிலில் அவரை பார்த்தேன். என்னிடம் அவர் நமது காதல் திருமணம் முறிந்துவிட்டது. நான் எனது வயதுக்கு ஏற்ற பெண்ணை திருமணம் செய்து வாழப்போகிறேன். இனிமேல் உங்கள் வழியை நீங்கள் பாருங்கள் என்று கூறி, என்னை தூக்கி எறிந்து பேசினார்.
அதை கேட்டவுடன் எனது இதயம் நொறுங்கிப்போனது. நீங்கள் வேறு திருமணம் வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள். ஆனால் என்னையும், உங்களோடு வைத்து கொள்ளுங்கள் என்று கெஞ்சினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இப்போது என்னை பார்த்தாலே, ஒதுங்கி ஓடுகிறார்.
அவரது முகத்தை மட்டுமே பார்த்து நான் அவரை காதலித்து, என்னையும் அவருக்கு முழுவதுமாக கொடுத்துவிட்டேன்.
இப்போது அவர் இல்லாமல் எனக்கு வாழ்வில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன். அவரது முகவரி கூட தெரியாமல் முந்தானையை விரித்துவிட்டேன். அவரை தேடி கண்டுபிடித்து என்னிடம் ஒப்படைக்கும்படி வேண்டுகிறேன். ஒருவேளை அவர் என்னை ஏற்க மறுத்தால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்’’என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, குமரன் நகர் போலீசாரை உரிய நடவடிக்கை எடுக்குமாறு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இந்த புகார் மனு கமிஷனர் அலுவலக அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
`நீங்கள் அந்த வாலிபரை முறையாக பதிவு திருமணம் செய்தீர்களா, அதற்கான ஆதாரம் எதுவும் உள்ளதா?' என்று கேள்வி எழுப்பினார்கள். ஆனால் காயத்ரி, `அவரை பதிவு திருமணம் செய்யவில்லை என்றும், நெற்றில் வைத்த குங்குமத்தை மங்கலநாணாக மதித்து, அவரை எனது கணவராக ஏற்றுக்கொண்டுவிட்டேன். அவர் சினிமாக்காரர் என்பதால் சினிமா பாணியில் என்னை திருமணம் செய்துவிட்டு, டாடா காட்டிவிட்டு போய்விட்டார் என்றும் கூறி காயத்ரி கதறி அழ ஆரம்பித்தார்.
போலீஸ் அதிகாரிகள், `உங்கள் முகவரி தெரியாத காதல் கணவர் கண்டிப்பாக உங்களுக்கு கிடைப்பார்' என்று ஆறுதல் கூறி அனுப்பினார்கள்.
No comments:
Post a Comment