ரிஷிவந்தியம் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல சென்றபோது தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதும், அவர் சென்ற வேன் மீதும் சிலர் தாக்குதல் நடத்த முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ரிஷிவந்தியம் தொகுதியில் கடந்த இரு நாட்களாக தேமுதிக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் அவரிடம் தங்களது பகுதி குறைபாடுகள் குறித்த மனுவை கொடுக்க பொதுமக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துச் சென்றனர்.
அப்போது மனுக்களை யாராவது ஒருவர் சேகரித்து கொடுங்கள் என்று விஜயகாந்த் கேட்டுக் கொண்டார். பின்பு அங்கு சில நிமிடங்கள் பேசி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் விஜயகாந்த் வேனுக்கு பின்னால் வந்த இரு கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
இந்த நிலையில் திருக்கோவிலூர் செல்ல மீண்டும் அவ்வழியே வந்த விஜயகாந்த் வேனை மறித்த மக்கள் எம்.எல்.ஏ. அலுவலகத்தை ரிஷிவந்தியத்தில் கட்ட உறுதியளித்தால் தான் வழிவிடுவோம் என்று கூறினர்.
பின்பு தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விஜயகாந்த் வேன் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.
ஆனாலும் மக்கள் ஆவேசத்தால் விஜயகாந்த் வந்த வேனை கைகளால் அடித்தனர். அந்த வேன் பின்பு வந்த கார்கள் மீது கற்களையும், மண்ணையும் வாரி இறைத்து பெரும் ரகளையில் ஈடுபட்டனர். சில இளைஞர்கள் விஜயகாந்த்தையும் தாக்க முயன்றனர். ஆனால் வேன் அந்த இடத்தில் இருந்து சீறிப்பாய்ந்தது.
இந்த சம்பவத்தால் விஜயகாந்த் உள்பட தேமுதிகவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
No comments:
Post a Comment