தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு, 14-வது சட்டசபை 23-ந்தேதி கூடியது. அன்றைய தினம் தற்காலிக சபாநாயகர் செ.கு. தமிழரசன் தலைமையில் 229 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர். அன்று பதவி ஏற்காத அமைச்சர் சிவபதி, திருச்சி எம்.எல்.ஏ. மனோகர் ஆகியோர் 27-ந்தேதி சபாநாயகர் தேர்தலுக்காக கூட்டிய சட்ட சபையில் பதவி ஏற்றனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் துரை முருகன் ஆகியோர் 30-ந்தேதி சபாநாயகர் அறையில் பதவி ஏற்றனர்.புதிய சட்டசபை நாளை காலை 10 மணிக்கு முறைப்படி கூடுகிறது. இதில் தமிழக கவர்னர் பர்னாலா உரையாற்றுகிறார். அவரது ஆங்கில உரையின் தமிழ் மொழி பெயர்ப்பை சபாநாயகர் ஜெயக்குமார் வாசிக்கிறார்.
கவர்னர் உரையில் இடம் பெற வேண்டிய அரசு கொள்கை குறித்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா 3 முறை அமைச்சரவையை கூட்டி ஆலோசித்தார். கவர்னர் உரையில் இடம் பெறவேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டு உரை தயாரிக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் எவ்வாறு நிறைவேற்றப்படும் என்பது கவர்னர் உரையில் இடம் பெறுகிறது.
இலவச அரிசி, தாலிக்கு தங்கம், மீனவர் உதவித்தொகை அதிகரிப்பு, அரசு பெண் ஊழியர்கள் பிரசவ விடுமுறை சலுகை உள்பட 7 திட்டங்கள் செயல் பட தொடங்கி விட்டன. அது குறித்த விவரங்கள் புதிதாக நிறைவேற்றப்பட வேண்டிய இலவச திட்டங்கள், அவற்றை நிறைவேற்று வதற்கான காலக்கெடு, நிறைவேற்றும் விதம் பற்றிய அரசு முடிவு ஆகியவையும் கவர்னர் உரையில் இடம் பெறும் என்று தெரிகிறது.
தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை அதிகரிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், புதிய வளர்ச்சி திட்டங்கள் ஆகியவை பற்றி அறிவிப்பும் கவர்னர் உரையில் இடம் பெறுகிறது. பள்ளி மாணவர்களுக்கு லேப்-டாப், கல்வி உதவித் தொகை வழங்குவது போன்றவற்றுக்கான அறிவிப்பும் இடம் பெறலாம் என்று தெரிகிறது.
பொறியியல் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங் எவ்வாறு நடைபெறும்? அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் இணைக்கப்படுமா? சமச்சீர் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான நிபுணர் குழு எவ்வாறு அமைக்கப் படும்? கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட இலவச டி.வி. திட்டம், இலவச வீடு கட்டும் திட்டம், காப்பீட்டு திட்டம் ஆகியவை தொடருமா? தொடர்ந்தால் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதற்கான விடையும் கவர்னர் உரையில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் புதிய அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் விளக்கமாக அறிவிக்கும் உரையாக கவர்னர் உரை இருக்கும் என்று தெரிகிறது. கவர்னர் உரைக்கு பின் அதன் மீது விவாதம் நடைபெறும். ஒருவார காலம் இந்த விவாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவாதத்துக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்து பேசுவார். அதன் பிறகு “பட்ஜெட்” தாக்கல் செய்யப்படும் தேதி அறிவிக்கப்படும். சட்டசபையில் “பட்ஜெட்” தாக்கல் செய்யப்பட்ட பிறகு அதன் மீதான விவாதம் நடைபெறும். பின்னர் ஒவ்வொரு துறைக்கும் மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடக்கும். அதை தொடர்ந்து துறை வாரியாக நிதி ஒதுக்கப்படும்.
No comments:
Post a Comment