முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் கேரளாவின் சதியைக் கண்டித்தும், அணையைக் காக்கக் கோரியும் வரும் ஜனவரி -ம் தேதி தேனியில் நடக்கவிருந்த உண்ணாவிரதம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமுகமான சூழல் உருவாகி வருவதால் உண்ணாவிரதம் கைவிடப்படுவதாகவும், தேவைப்பட்டால் மீண்டும் ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் பொங்கி எழும் என்றும் இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை முன்வைத்து தேனி மாவட்டம் வீரபாண்டியில் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சார்பில் 8.1.12 அன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அனைத்து திரைத்துறை சங்கங்களின் ஆதரவையும் இயக்குநர்கள் சங்கம் கோரியிருந்தது.
இந்தச் சூழ்நிலையில், "முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க முடியாது. 1979-ம் ஆண்டு முதல் 132 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. அதனால் அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை. மேலும் நில நடுக்கத்தாலும் பாதிப்பு வர வாய்ப்பில்லை என தொழில்நுட்ப வல்லுநர் குழு அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்பதை எடுத்துக்காட்டிய உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ எஸ் ஆனந்த் தலைமையிலான குழு, கேரளாவின் அனைத்து வாதங்களையும் நிராகரித்துள்ளது. இதுகுறித்த செய்திகள் பத்திரிகைகளில் வந்துள்ளன.
இந்தத் தீர்ப்பு மூலம் தமிழக கேரள எல்லைகளில் மீண்டும் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் வரும் 8-ம் தேதி நடைபெறுவதாக இருந்த போராட்டத்தை கைவிடும்படியும், தேவைப்பட்டால் மொத்த திரையுலகமும் இணைந்து போராடலாம் என்றும் திரையுலகப் பிரமுகர்கள் பலர் கூறிய கருத்துக்கு மதிப்பளித்து, வரும் 8.1.12-ம் தேதி நடக்கவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ரத்து செய்வதென்று தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு தங்கள் ஆதரவு தேவை என்று கேட்ட உடனே, செயற்குழுவைக் கூட்டி உடனடியாக தங்கள் ஆதரவைத் தெரிவித்த நடிகர் சங்கம், அதன் தலைவர் ஆர் சரத்குமார், செயலர் ராதாரவி மற்றும் நிர்வாகக் குழுவினருக்கு இயக்குநர்கள் சங்கம் தனது இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
இப்படியொரு போராட்டம் அறிவித்த உடனே அதில் பங்கெடுத்துக் கொள்ள முன்வந்த இயக்குநர்கள், உதவி இயக்குநர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என அந்த அறிக்கையில் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment