தொலைத் தொடர்பு சாதனங்கள்தான் தற்போதைய தொழில், வர்த்தகம் உள்ளிட்ட அத்தனை துறைகளிலும் ஜீவநாடியாக அமைந்துள்ளன. இந்த சாதனங்களின் உதவி இல்லாமல் இன்று எந்தப் பணியையும் உடனுக்குடன் செய்து முடிக்க முடியாது. அப்படிப்பட்ட தொலைத்தொடர்பு சாதனங்களில் முக்கிய இடம் செல்போனுக்கு உண்டு.
எளியவர்களும் எட்டிப்பிடிக்கும் விலைகளில் செல்போன்கள் கிடைப்பதால், இன்று இந்தியாவில் பெரும்பான்மையானோர் கைகளை செல்போன் அலங்கரிக்கிறது. எனவே தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும், வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பதற்காக, தொலைபேசி கட்டணங்களில் பல்வேறு கவர்ச்சித் திட்டங்களை போட்டி போட்டு அறிவித்து வருகின்றன.
பாரதி ஏர்டெல், ஏர்செல், வோடபோன், டாடா டொகாமோ, ஐடியா செல்லுலார் போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்காக, போஸ்ட் பெய்ட் மற்றும் பிரி பெய்ட், எஸ்.எம்.எஸ். போன்ற சேவைக்காக விதவிதமான கட்டணங்களை அறிவித்துள்ளன.
பண்டிகைக் காலங்களில் கட்டணத்தில் சலுகையும் கொடுக்கப்படும். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக முக்கிய சாலை சந்திப்புகளில் முகாம்கள் நடத்தி, வாடிக்கையாளர்களை சேர்ப்பதை காணமுடியும். தொலைக்காட்சிகளிலும், சுவர், பேனர் விளம்பரங்களிலும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டு விளம்பரம் செய்து வருகின்றன.
மற்ற வர்த்தகர்களின் விளம்பரங்களைப் பார்க்கிலும், இந்த தொலை தொடர்பு நிறுவனங்களின் விளம்பரங்களே அதிகம் ஆக்கிரமிக்கின்றன. கட்டணத்தை குறைத்தால்தான் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்ற எண்ணத்தில் ஒரு கட்டத்தில், பிரி பெய்ட், போஸ்ட் பெய்டு சேவைக்கு மிகக் குறைந்த கட்டணம் அறிமுகம் செய்யப்பட்டது. வாடிக்கையாளர்கள் ஓரளவுக்கு சேர்ந்ததும், கட்டணத்தை இந்த நிறுவனங்கள் உயர்த்தின. இது அந்த நிறுவனங்களின் வர்த்தக இலக்கை அடையும் வகையிலும், வருவாயை பெருக்கும் வகையிலும் அமையவில்லை என்று தெரிகிறது.
எனவே தொலைபேசி கட்டணங்களை இந்த ஆண்டில் அதிகரிப்பதற்கு மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிபெய்டு உபயோகிப்பாளர்களுக்கு கடந்த ஆண்டு கட்டணத்தில் 20 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு இந்த ஆண்டு போஸ்ட் பெய்டு உபயோகிப்பாளர்களுக்கும் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த கட்டணம் ஒரு செகண்டு வீதம் உயர்த்தப்பட உள்ளது.
முதல் நிலையில் உள்ள 3 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்த கட்டண உயர்வை கொண்டு வரக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில், செல்போனில் இருந்து பேசும் எஸ்.டி.டி. மற்றும் லோக்கல் அழைப்புகள் அனைத்துக்கும் ஒரு செகண்டுக்கு ஒரு பைசா என்று இருந்த கட்டணம், இனிமேல் 1.20 பைசா என்று உயர்த்தப்படுகிறது.
அதுபோல் செல்போனில் இருந்து லேண்டு லைன்க்கு பேசுவதற்கான கட்டணம் ஒரு செகண்டுக்கு 1.5 பைசா என்று உயர்த்தப்படுகிறது. போஸ்ட் பெய்டு உபயோகிப்பாளர்களுக்கு 20 சதவீத கட்டண உயர்வை ஏற்கனவே வோடபோன் நிறுவனம் அமல்படுத்திவிட்டது. இந்தக் கட்டண உயர்வு தற்போது டெல்லியில் அமல்படுத்தப்பட்டு விட்டதாகவும், மற்ற மாநிலங்களில் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றும் வோடபோன் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மற்ற நிறுவனங்களும் விரைவில் கட்டணத்தை உயர்த்துவார்கள் என்றும் வருவாயை கணக்கிடும்போது இதைத் தவிர்க்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment