சமையல் எரிவாயு டேங்கர் லாரி வேலை நிறுத்தத்தால், நாளை முதல் தமிழகம் முழுவதும் சிலிண்டர்களே கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, புதிதாக பதிவோர், 45 நாட்களும், காத்திருப்பில் உள்ளோர், ஒரு மாதமும் காத்திருக்க வேண்டும். எரிவாயு டேங்கர் லாரிகள், தொடர் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர். கடந்த 12ம் தேதி முதல், ஒரு வாரமாக போராட்டம் நீடிக்கிறது. இதனால், மங்களூர் மற்றும் விசாகப்பட்டினத்தில் இருந்தும், சமையல் எரிவாயு வரவில்லை. அனைத்து சிலிண்டர் நிரப்பும் மையங்களிலும், எரிவாயு காலியாகி விட்டது. செங்கல்பட்டில் இன்றுடன், எரிவாயு சிலிண்டர்கள் காலியாகின்றன.
1.40 கோடி :
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களுக்கு, தினமும், 20 லட்சம் சிலிண்டர்களுக்கு, டேங்கர் லாரிகளில் எரிவாயு வரும். ஆனால், ஏழாவது நாளாக போராட்டம் தொடர்வதால், 1.40 கோடி சிலிண்டர்களுக்கான எரிவாயு வரவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை, நேற்று வரை, அனைத்து ஏஜென்சிகளிலும், 30 லட்சம் சிலிண்டர்கள் பதிவு செய்யப்பட்டு காத்திருப்பில் உள்ளன. இவற்றுக்கு சிலிண்டர் எப்போது கிடைக்கும் என தெரியவில்லை.
நாளை முதல் இல்லை : இதுகுறித்து, எரிவாயு ஏஜென்சிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறியதாவது:
இன்னும் ஒரு நாளைக்கு மட்டுமே, சிலிண்டர்கள் வினியோகம் இருக்கும். சென்னையை பொறுத்தவரை, மணலிக்கு குழாயில் வரும் எரிவாயு மூலம், சிலிண்டர்கள் வினியோகமாகும். மற்ற மாவட்டங்களுக்கு கிடைப்பதில் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ராமச்சந்திரன் கூறினார்.
முடிவுக்கு வர... :
போராட்டம் நடத்தும் லாரி அதிபர்களை, எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவன செய்தித் தொடர்பாளர் வெற்றி கூறியதாவது: வேலை நிறுத்த பிரச்னை அப்படியே தொடர்கிறது. எந்த மாற்றமும் இல்லை. சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க, இதுவரை வேறு நடவடிக்கைகள் இல்லை. பேச்சுவார்த்தை நடந்தால் அல்லது வேலை நிறுத்தம் முடிந்தால் தான் பிரச்னை தீரும்.இவ்வாறு வெற்றி கூறினார்.
சிலிண்டரே இல்லாமல் சேமிக்க சொல்லும் எண்ணெய் நிறுவனம் :
இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், சமையல் எரிவாயு சேமிப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் நடந்த இந்த நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் நிறுவன செயல் இயக்குனர் ஜெயச்சந்திரன் பேசும்போது, "பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயுவை, வீண் விரயம் செய்யாமல் சேமித்து பயன்படுத்த வேண்டும்' என்றார்.
சமையலுக்கே எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்காத நிலையில், அதை சேமியுங்கள் என, இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியிருப்பது, நுகர்வோரை வியப்படையச் செய்துள்ளது.
சென்னையில் இன்று முத்தரப்பு கூட்டம் :
காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக, சென்னை சிவில் சப்ளை அலுவலக அதிகாரிகள் முன்னிலையில், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மற்றும் காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்கும் முத்தரப்பு கூட்டம், இன்று நடக்கிறது. அந்தக் கூட்டத்தில், வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
No comments:
Post a Comment