புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன் என்று கோர்ட்டில் ஆஜரான வடிவேலு, செய்தியாளர்களை சந்திக்கும் போது தெரிவித்தார். தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. கடந்த சட்டசபை தி.மு.க.,வுக்கு ஆதரவாக தமிழகம் முழுக்க சூறாவளி பிரசாரம் செய்த வடிவேலு, தேர்தல் முடிவுக்கு பின்னர் இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு போனார். சினிமாவிலும் வாய்ப்பின்றி தவித்து வந்தார்.
இந்நிலையில் தேர்தலின் போது திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் விஜயனை ஆதரித்து நடிகர் வடிவேலு கடந்த ஏப்ரலில் பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் போது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறியது போன்ற காரணத்திற்காக வடிவேலு மற்றும் விஜயன் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு நத்தம் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் ஆஜராக வடிவேலு இன்று(18.01.12) நத்தம் கோர்ட்டிற்கு வந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிப்ரவரி 14ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
பிறகு வெளியே வந்த வடிவேலுவை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது, தேர்தல் பிரசாரத்திற்கு பிறகு ஏன் சினிமாவில் நடிக்கவில்லை என்று கேட்டனர். அதற்கு வடிவேலு, இப்போது தான் நல்ல கதை கிடைத்திருக்கிறது. அதில் ஹீரோவாக நடிக்கிறேன். விரைவில் உங்களை ஹீரோவாக வந்து சந்திக்கிறேன். தொடர்ந்து மக்களை சிரிக்க வைப்பேன் என்று கூறினார்.
No comments:
Post a Comment