இயக்குனர் லிங்குசாமியின் படங்கள் கமர்ஷியல் ஆக்ஷன் படங்களாகவே இருக்கும் ( முதல் படமான ஆனந்தம் தவிர ). இந்த பொங்கலுக்கு வெளிவந்திருக்கும் வேட்டை படமும் கலர்ஃபுல் கமர்ஷியல் படம் தான்.
பொதுவாகவே ஒரு இயக்குனர் அவர் படத்தைப் பற்றி பேசும் போது ஆஹா ஓஹோ என்று அவரே புகழ்ந்துகொள்வது தான் வழக்கமாக இருக்கும். ஆனால் இயக்குனர் லிங்குசாமி எஸ்.எஸ் மியூசிக் சேனலில் கொடுத்த பேட்டியில் அவரின் பேச்சு ஆச்சரியமாகவே இருந்தது.
அவர் பேசும் போது, ஏதோ சினிமாவை தப்புதப்பா கத்துக்கிட்டேன். நானும் படம் எடுக்கிறேன். வேட்டை படம் ஒரு சரியான படம் என்று என்னால் சொல்லமுடியாது. தமிழ் சினிமாவில் சாதித்த பல ஜாம்பாவான்கள் இருக்கிறார்கள். அவர்கள் காலில் விழுந்து நான் மன்னிப்பு கேட்கிறேன். நிச்சயமாக ஒரு சரியான படத்தைக் கொடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருக்கிறது. அதை விரைவில் செய்வேன்.
பல இயக்குனர்கள் இருக்கிறார்கள், அவர்கள் எல்லோரும் என்னென்ன செய்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். இன்று மீடியா அதிகமாகிவிட்டது. மக்களை தியெட்டருக்கு வரவழைக்க பல விஷயங்கள் பேச வேண்டி இருக்கு. இது ஒரு வியாபாரம் தானே. வியாபாரத்துக்காக செய்வதுதான் இதெல்லாம்.
நான் என்ன பெருசா சாதித்துவிட்டேன் என்று எனக்கு தெரியவில்லை. ஏதோ, படம் எடுக்கிறேன் அதையும் பாராட்டுராங்க. அதுக்கு ஒரு விழா! நான் சாதித்துவிட்டேன் என்று சொல்கிற அளவுக்கு ஒரு படத்தை நான் இன்னும் இயக்கவில்லை.
பொங்கல்... அப்போ இருந்த சந்தோஷம் இப்போ இல்லை. பொங்கலுக்கு புதுபடம் பார்த்துவிட்டு, படம் சொதப்பலா இருக்கே என்று சொல்லி அந்த இயக்குனரை கமெண்ட் பண்ணுவோம். இப்போ நாமே அந்த வேலையை செய்கிறோம். பயமா தான் இருக்கு. என் படத்தை பார்த்து கமெண்ட் பண்ண பலபேர் இருக்காங்க...
ஆனால், நிச்சயமாக ஒரு நல்ல படத்தை எடுத்துவிட்டு தான் சினிமாவை விட்டு விலகுவேன் என்றார்.
லிங்குசாமி தற்போது பாலாஜி சக்திவேல் இயக்கும் வழக்கு எண் 189 என்ற படத்தை தயாரித்து வருகிறார். மேலும் சில எதார்த்த படைப்புகளையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.
No comments:
Post a Comment