கறுப்புப் பணம் சம்பந்தப்பட்ட கணக்கு விவரங்களை எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது என்றும், யாராவது வற்புறுத்திக் கேட்டாலும் சொல்லவே கூடாது என்றும் வருமான வரித்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கறுப்புப் பணம் வைத்திருப்பது சட்டப்படி குற்றம். தேசிய அவமானம். ஆனால் இதனை சமூகத்தின் பெரிய மனிதர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் பலரே பல ஆண்டுகளாகச் செய்து வருகின்றனர்.
வெளிநாட்டு வங்கிகளில் பல லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது குறித்து பல காலமாகப் பேசப்பட்டாலும், எந்த அரசும் இந்தப் பணத்தை இந்தியாவுக்குள் கொண்டு வர முயற்சிக்கவில்லை.
இப்போது கறுப்புப் பணம் குறித்து அதிகம் பேசத் தொடங்கிவிட்டதால் உஷாராகிவிட்ட பலர், பணத்தை இடம் மாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், ரகசிய வங்கி கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பெயர் பட்டியலை சம்பந்தப்பட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியா பெற்றுள்ளது. லிச்டென்ஸ்டீனில் உள்ள எல்.ஜி.டி. வங்கியில் ரகசிய கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை ஜெர்மனி அரசிடம் இருந்து வருமான வரித்துறையின் உயர் அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் (சி.பி.டி.டி.) பெற்றுள்ளது. மேலும், பல்வேறு நாடுகளில் இருந்து 9,900 தகவல்கள், ஆவணங்களைப் பெற்றுள்ளது.
இந்த பெயர் பட்டியலின் ரகசியத்தை பாதுகாப்பதில் சி.பி.டி.டி. மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
ஒருவேளை இந்தப் பெயர்ப் பட்டியல் வெளியாகிவிட்டால், வெளிநாடுகள், கறுப்பு பண முதலைகளின் பெயர் பட்டியலை வெளியிடுவதை நிறுத்தி விடும் என்றும், மேற்கொண்டு எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள முன்வராது என்றும் சி.பி.டி.டி. கூறி வருகிறது.
இந்த பெயர் பட்டியல், ஏற்கனவே கொச்சி, மும்பை, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள வருமான வரித்துறை பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு இயக்குனரகம் உள்ளிட்ட விசாரணை அமைப்புகள், இந்த பெயர் பட்டியலைக் கேட்டு வருகின்றன.
சொல்லவே சொல்லாதீங்க...
அப்படி கேட்கும் அரசுத் துறைகளிடம் எழுத்துமூலம் உறுதிமொழி பெற்ற பிறகே பெயர் பட்டியலை வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு சி.பி.டி.டி. உத்தரவிட்டுள்ளது. 'பெயர் பட்டியலை வரிவசூலுக்காகவோ அல்லது வரிஏய்ப்பு விசாரணைக்காகவோ மட்டுமே பயன்படுத்துவோம்' என்று எழுதி கையெழுத்து பெற்ற பிறகே, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு இந்த பெயர் பட்டியலை வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதாவது இவர்களை கைது செய்யவோ, இவர்கள் பற்றி செய்தி வெளியிடவோ கூடாது.
மேலும், இந்த பெயர் பட்டியல், எந்த அதிகாரி பெயரில் பெறப்படுகிறதோ, அவரே இந்த பட்டியலை ரகசியமாக பாதுகாப்பதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும், எத்தகைய சோதனையிலும் இந்தப் பட்டியல் ரகசியமாகவே இருக்க வேண்டும் என்றும் சி.பி.டி.டி. கூறியுள்ளது.
பெயர் பட்டியலை கேட்டு வாங்கும் அரசு விசாரணை அதிகாரிகளின் செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணிக்கும் பணியிலும் வருமான வரித்துறை ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் மானத்தை இத்தனை அக்கறையோடு காக்கும் அரசு, உள்நாட்டில் வரி செலுத்தாதவரிடத்திலும் இதே கரிசனம், கவனம், ரகசியக் காப்பைக் காட்டுமா?
No comments:
Post a Comment