இந்தியாவில் ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றம் என்ற நிலை இருந்து வந்தது. இதற்கு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 வழிவகுத்து இருந்தது. ஆனால் ஓரினச்சேர்க்கை தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, இருவரின் சம்மதத்துடனான ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றமல்ல என்று அதிரடி தீர்ப்பு வழங்கி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பாரதீய ஜனதா மூத்த தலைவர் பி.பி. சிங்கால் மற்றும் ஓரினச்சேர்க்கை எதிர்ப்பாளர்கள் அப்பீல் செய்தனர். பி.பி.சிங்கால் தனது அப்பீல் வழக்கில், ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது, ஒழுக்கக்கேடானது, இந்திய கலாசாரத்துக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அப்பீல் வழக்குகள் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாய் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குழந்தைகள் உரிமைக்கான டெல்லி ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அமரேந்திர சரண் வாதிடும்போது, ஹோமோ செக்ஸ், லெஸ்பியன் ஆகிய ஓரினச்சேர்க்கைகளை இயற்கை அங்கீகரிக்கவில்லை. இவை இயற்கையின் ஒழுங்குக்கு எதிரானவை என்று கூறினார்.
அதற்கு நீதிபதிகள், ஓரினச்சேர்க்கை என்றால் என்ன? இது இயற்கைக்கு எதிரானதா? இயற்கையின் ஒழுங்குமுறையை விளக்கக்கூடிய வல்லுனர் யார் இருக்கிறார்கள்? வாடகைத்தாய், சோதனைக்குழாய் குழந்தையும் கூட இயற்கைக்கு எதிரானவர்கள்தானா? என சரமாரி கேள்விகள் எழுப்பினர்.
மேலும், அரசியல் சட்டம் தொடர்பான விளக்கம், கடந்த 60 ஆண்டுகளில் மாறி வந்துள்ளது, இந்தப் பிரச்சினையை அந்த விதத்தில்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.
வழக்கு விசாரணை தொடர்ந்து இன்றும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தங்களையும் இணைத்து கொள்ள வேண்டும் என்று ராணுவம் கடந்த 7-ந் தேதி முறையிட்டதை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து விட்டது நினைவுகூறத்தக்கது.
No comments:
Post a Comment