இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய 3 நாடுகள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இந்திய அணிக்கான கடைசி லீக் போட்டி, தற்போது ஹோபர்ட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதுகின்றன. இப்போட்டியில் போனஸ் புள்ளியுடன் வெற்றி பெற்றால் மட்டுமே, இறுதிப்போட்டிக்கான வாய்ப்பில் நமது அணி நுழைவதற்கான சாத்தியக்கூறு கிடைக்கும்.
இந்நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி இலங்கையை முதலில் பேட்டிங் செய்ய வருமாறு அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 320 ர ன்கள் குவித்தது.
தில்ஷான் 165 பந்துகளில் 11 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உள்பட 160 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சங்ககாரா 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
40 ஓவர்களில் 320 ரன்கள் எடுத்தால் போனஸ் புள்ளியுடன் வெற்றி கிடைக்கும் என்ற கடினமான நிலையில் ஷேவாக்கும், தெண்டுல்கரும் களமிறங்கினர். இம்முறை அதிரடி காட்டிய ஷேவாக் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சற்று நம்பிக்கை அளித்த சச்சின் 30 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
காம்பீர் தன் பங்கிற்கு 63 ரன்கள் குவித்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 30 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது.
இந்திய அணி அடுத்த 60 பந்துகளில் 90 ரன்கள் அடித்தால் போனஸ் புள்ளியுடன் கூடிய வெற்றி கிடைக்கும் என்ற நிலை இருந்தது.
இலங்கை அணியில் தில்ஷான் அதிரடி காட்டினார் என்றால், கோக்லி இலங்கை அணியினரை துவம்சம் செய்தார். அவரது ருத்ரதாண்டவ ஆட்டத்தினால் இந்திய அணி வெற்றி பெற்றது. இவருக்கு துணையாக சுரேஷ் ரெய்னா அதிரடி காட்டினார்.
இந்திய அணி 36.4 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கான 321 ரன்களை எடுத்தது. விராட் கோக்லி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இதனால் இந்திய அணிக்கு போனஸ் புள்ளியுடன் சேர்த்து 15 புள்ளிகளை சேர்த்துள்ளது. புள்ளி பட்டியலில் இலங்கையும் 15 புள்ளிகள் பெற்றுள்ளது. நாளை மறுநாள் ஆஸி. அணியுடன் இலங்கை அணி மோதும் போட்டியில், ஆஸி அணி வெற்றி பெற்றால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்புள்ளது.
விராட் கோக்லி 86 பந்துகளில் 16 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உட்பட 133 ரன்களும், ரெய்னா 24 பந்துகளில் 40 ரன்களும் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.
No comments:
Post a Comment