தாராபுரம் அருகேயுள்ளது ருத்ராவதி கிராமம். இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள வீடுகளின் மீது நள்ளிரவு கற்கள் வந்து விழுந்தன. திடுக்கிட்டு விழித்த பொது மக்கள் சுற்று முற்றும் பார்த்தனர். யாரும் சிக்கவில்லை. அச்சம் கலந்த பீதியுடன் அன்றைய இரவை கழித்தனர்.
ஆனால் நள்ளிரவில் கற்கள் வந்து விழுவது வாடிக்கையாகி விட்டது. கற்கள் வீசுவோரை பிடிக்க பொதுமக்கள் இணைந்து குழு அமைத்தனர். அவர்களும் இரவு-பகலாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பலன் இல்லை. அதிர்ச்சியில் உறைந்த பொது மக்கள் குண்டடம் போலீஸ், கிராம நிர்வாக அதிகாரி நடராஜன் மற்றும் தாராபுரம் வருவாய் துறையினரிடம் புகார் செய்தனர்.
அதிகாரிகளும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்திலும் கற்கள் பறந்து வந்து விழுந்தன. இதைப் பார்த்த அதிகாரிகளுக்கு ஏகப்பட்ட அதிர்ச்சி. ஒரு வழியாக சுதாரித்துக் கொண்ட அவர்கள் பொதுமக்களை சமாதானப்படுத்தி விட்டு அங்கிருந்து கிளம்பினார்கள். விதியை நொந்த பொதுமக்கள் பில்லி சூனியம் காரணமாக கற்கள் வந்து விழுகிறதோ என நினைத்து வீடுகளில் மஞ்சள் துணியில் எலுமிச்சம் பழத்தை கட்டி தொங்க விட்டுள்ளனர்.
கடந்த 20 நாட்களாக தூக்கத்தை தொலைத்த அவர்கள் கற்கள் எப்படி வந்து விழுகிறது என்பதை கண்டு பிடிப்பதில் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். பறந்து வரும் கற்கள் விழுந்ததில் சிலருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment