சென்னை பெருங்குடியில் கடந்த மாதம் 23-ந்தேதி பேங்க் ஆப் பரோடாவில் நடந்த கொள்ளையிலும், கடந்த 20-ந்தேதி கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நடந்த கொள்ளையிலும் சம்பந்தப்பட்ட 5 கொள்ளையர்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.மாஜிஸ்திரேட்டு விசாரணையும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இதில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கொள்ளையர்களை உயிருடன் பிடிக்காமல் எப்படி சுடலாம் என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இணைந்து “உண்மை அறியும் குழு”வை உருவாக்கி என் கவுண்டர் குறித்து விசாரிக்க இன்று வேளச்சேரி சென்றனர்.
மார்க் என்பவர் தலைமையில் சுகுமாறன், கல்யாணி, மதுமிதா, சந்திரா, நிர்மலா, அப்துல் காதர், மனிதா, மனோகரன் உள்பட 10 பேர் இன்று வேளச்சேரி ஏ.எல். முதலி தெருவுக்கு சென்று அங்கு என்கவுண்டர் நடந்த வீட்டை பார்க்க முற்பட்டனர். ஆனால் அங்கு தெரு முனையிலேயே போலீசார், இரும்பு தடுப்பு அமைத்து காவலுக்கு நின்று கொண்டிருந்தனர்.
உண்மை அறியும் குழுவினர் அங்கு வந்தபோது உள்ளே செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர்.என்கவுண்டர் நடந்த பிறகு அந்த வீட்டை சீல் வைத்துள்ளோம். மாஜிஸ்திரேட்டு விசாரணை நடப்பதால் நீங்கள் அந்த வீட்டுக்குள் போக முடியாது. உயர் அதிகாரி, அல்லது மாஜிஸ்திரேட்டிடம் அனுமதி வாங்கி வந்தால் வீட்டை திறக்க முடியும் என்றனர்.
ஆனால் இதை உண்மை அறியும் குழுவினர் ஏற்க மறுத்தனர். நாங்கள் மனித உரிமை மீறல் பற்றி விசாரிக்கத்தான் வந்திருக்கிறோம். எங்களை தடுக்காதீர்கள். என்கவுண்டர் நடந்த வீட்டை பார்க்க அனுமதிக்காவிட்டாலும் பரவாயில்லை. அக்கம் பக்கம் வீட்டுக்காரர்களை விசாரிக்க அனுமதியுங்கள் என்றனர்.
போலீசார் உடனே அவர்களிடம் பேசாமல் ஒதுங்கிக் கொண்டனர். அதன் பிறகு உண்மை அறியும் குழுவினர் அங்குள்ள வீடுகளில் என்கவுண்டர் பற்றி விசாரிக்க தொடங்கினர். இதற்கு அங்குள்ள மக்கள் பதில் கூற மறுத்து விட்டனர்.
மாறாக தெருவில் உள்ளவர்கள் ஒன்று திரண்டு மனித உரிமை குழுவினரை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி கேட்டனர். என்கவுண்டரில் கொள்ளையர்கள் சுடப்பட்டது பற்றி விசாரிக்க வருகிறீர்களே கொள்ளையர்கள் பாங்கியில் கொள்ளையடித்த போது எங்கே சென்றீர்கள். அப்போது ஏன் விசாரிக்கவில்லை?
வங்கி ஊழியர்கள் தாக்கப்பட்டபோது, எங்கே சென்றீர்கள் என்று சரமாரியாக கேள்வி கேட்டனர்.அதற்கு மனித உரிமை அமைப்பினர் கூறும்போது, என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறியத்தான் வந்தோம் என்றனர். ஆனால் பொதுமக்கள் அவர்களை பேச விடவில்லை.
நீங்கள் மக்களுக்கு என்ன செய்கிறீர்கள்? கிரிமினல்களுக்கு ஆதரவாகத்தான் வருகிறீர்கள். தாலி செயின் பறிப்பு, கொலை, கொள்ளை சம்பவங்கள் நடக்கும்போது பார்த்து கொண்டுதானே இருக்கிறீர்கள். அப்போது மனித உரிமை அமைப்பு என்ன செய்கிறது?
குற்றவாளிகளுக்கு ஆதரவாக வராதீர்கள். வெளியே போங்கள் என்று அந்த தெருவில் இருந்து அவர்களை விரட்டி அடித்தனர். பொதுமக்கள் ஆவேசத்துடன் கேள்வி கேட்டு விரட்டி அடித்ததால் அவர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
பொய்யினால் சூழப்பட்ட பொலீஸ்,அச்சத்தினால் மறைத்த மக்கள். பொலீசாரின் அனைத்து பொய்களும் தான் அம்பலமாகி விட்டதே.
ReplyDelete