சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் வருகிற மார்ச் 18-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
வேட்பு மனு தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. அ.தி.மு.க. வேட்பாளர் முத்து செல்வி கடந்த 23-ந்தேதியும், ம.தி.மு.க. வேட்பாளர் சதன் திருமலைக்குமார், தே.மு.தி.க. வேட்பாளர் முத்துக்குமார் ஆகியோர் கடந்த 24-ந் தேதியும், வேட்பு மனு தாக்கல் செய்தார்கள்.
தி.மு.க. வேட்பாளர் ஜவஹர் சூரியகுமார் நாளை (27-ந்தேதி) வேட்பு மனு தாக்கல் செய்கிறார். பா.ஜ.க. வேட்பாளர் முருகன் ஓரிரு நாளில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். வேட்பு மனு தாக்கல் தேதி வருகிற 29-ந்தேதி முடிகிறது.
அ.தி.மு.க., தி.மு.க., ம.தி. மு.க., தே.மு.தி.க. வேட்பாளர்கள் தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில் அவர்களுக்காக கட்சி நிர்வாகிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அ.தி.மு.க. வேட்பாளர் முத்துசெல்விக்கு ஆதரவு திரட்டுவதற்காக 32 அமைச்சர்கள் உள்பட 43 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழுவை முதல்- அமைச்சர் ஜெயலலிதா நியமித்தார். அவர்கள் அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக சங்கரன்கோவில் தொகுதிக்கு இன்று வருகிறார்கள்.
தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ள 32 அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள் அடங்கிய 43 பேருக்கும் தேர்தல் பணிகள் முடிவு செய்யப்படுகின்றன. இதற்கான கூட்டம் மந்தித் தோப்பு ரோட்டில் உள்ள ஜெயஸ்ரீ மகாலில் இன்று நடந்தது.
தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வரும் சங்கரன்கோவில் தொகுதியில் எந்தெந்த பகுதியில் பணியாற்ற வேண்டும்? எந்தெந்த வியூகங்களை பயன்படுத்த வேண்டும்? உள்ளிட்ட விஷயங்களை அமைச்சர்கள் பன்னீர் செல்வம், செங்கோட்டையன் மற்றும் மாநில நிர்வாகி கள் விளக்கு கின்றனர். இந்த கூட்டத்திற்கு பிறகு இன்று மாலை அல்லது நாளை முதல் 32 அமைச்சர்களும் சங்கரன்கோவில் தொகுதியில் நேரடியாக களமிறங்கி தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள்.
32 அமைச்சர்கள் முற்றுகையிட்டு தேர்தல் பணியாற்ற உள்ளதால் சங்கரன்கோவில் தொகுதியில் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்ட உள்ளது.
No comments:
Post a Comment