தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான அதிகாரத்தை தேர்தல் கமிஷனிடம் இருந்து பறிக்க வகை செய்யும் திட்டம் குறித்து, நேற்றைய அமைச்சர்கள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இவ்விவகாரத்தைப் பற்றி எவ்வித ஆலோசனையும் நடத்தாமல் அமைச்சர்கள் குழு நழுவியது.
உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் சமயத்தில், முஸ்லிம்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்த மத்திய அமைச்சர்கள் சல்மான் குர்ஷித் மற்றும் பெனி பிரசாத் வர்மா ஆகியோர், தேர்தல் கமிஷனின் நடவடிக்கைக்கு ஆளாகினர். இறுதியாக, நடத்தை விதிகளை மீறியதாக, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது, மத்தியில் ஆளும் காங்கிரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால், நடத்தை விதிகளை அமல்படுத்துவது தொடர்பாக, தேர்தல் கமிஷனின் அதிகாரத்தைப் பறித்து, கோர்ட்டிடம் ஒப்படைக்கும் வகையில், சில திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நேற்று முன்தினம் பரபரப்புத் தகவல் வெளியானது. தேர்தல் கமிஷனின் நிர்வாகச் செயல் விதிமுறைகளுக்கு சட்டப்படியான புதுவடிவத்தை அளிக்கும் திட்டம் குறித்து, ஊழல் விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழு கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின.
இத்தகவலை மத்திய அரசு, நேற்று முன்தினமே திட்டவட்டமாக மறுத்தது. எனினும், அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்தால், இத்திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், நேற்று டில்லியில் நடந்த, ஊழல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்தில், தேர்தல் கமிஷன் அதிகாரங்கள் தொடர்பான திட்டம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், அமைச்சர்கள் குழு கூட்டம் நேற்று டில்லியில் நடந்தது. ஆனால், "பொது கொள்முதல் சட்டம் மற்றும் இயற்கை வளங்களைக் கையாளுதல் தொடர்பான விவகாரங்கள் மட்டுமே ஆலோசிக்கப்பட்டது. நடத்தை விதிகள் தொடர்பான எதுவும் அமைச்சர்கள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை' என, மத்திய அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறினார். உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் முடிந்த பின், தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்க உள்ளது. அப்போது, தேர்தல் கமிஷனிடம் இருந்து அதிகாரத்தைப் பறிக்கும் திட்டத்தை அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெற்று, சட்ட விதிகளுக்கு உட்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக டில்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment