தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் 7வது பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நேற்று நடந்தது. விஜயகாந்த் தலைமையில் நடந்த கூட்டத்துக்கு, அழைப்பு விடுக்கப்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது: தானே புயலால் பாதித்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு ரூ.200 கோடி வட்டியில்லா கடன் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது.
மானியமா கொடுப்பதா சொல்லிட்டு, இப்போது அந்த தொகையை கடனாக கொடுக்கிறாங்க. இப்படித் தான் மத்திய, மாநில அரசுங்க மக்களை ஏமாத்துறாங்க. ஆனா மக்களை ஏமாத்தி ஓட்டை மட்டும் வாங்கிக்கிறாங்க. கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னையில தமிழக அரசு நிபுணர் குழு ஒன்றை அனுப்பி ஒரு அற்ப நாடகத்தை அரங்கேற்றியிருக்கு. அந்த அம்மா பதவி ஏற்று 100 நாள் ஆன உடனே பாராட்டி பேச சொன்னாங்க. கூடங்குளம் பிரச்னையில அந்த பகுதி மக்கள் 100 நாளா தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தாங்க அப்போ அவங்கிட்ட இந்த அம்மா போய் பேசனும்ல.
தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லைன்னு பார்த்தா, அந்த பகுதியில மண் அள்ளுற ஒருத்தருக்காக இந்த விஷயத்துல அந்த அம்மா பாலிசா போறதா சொல்றாங்க. இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல. தேர்தல் சமயத்துல பணம் கொடுத்து அந்த ஆளு உதவுறதா சொல்றாங்க. கூடங்குளம் பிரச்னையில ஏதோ சதி நடக்கிறது?. சட்டமன்றத்துல நான் கைய காட்டி பேசினதா சொல்லி சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்க. சட்டமன்றத்துல கைய காட்டக் கூடாது, நாக்க துருத்தக் கூடாதுன்னு சட்ட புத்தகத்தில எங்கயாவது சொல்லியிருக்கா.
1991ம் ஆண்டில் இருந்து அதிமுக, திமுக கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி செஞ்சாங்க. மின் உற்பத்திக்காக ஏதாவது திட்டம் போட்டாங்களா? இல்லை. அவங்க செஞ்ச தப்புகளால தான் இப்ப தமிழகம் இருண்டு போயிருச்சு. மாணவர்கள் எல்லாம் படிக்க முடியாம சிரமப்படுறாங்க. வரும் தேர்தல்ல தேமுதிக ஆட்சிய பிடிக்கும். கடந்த தேர்தலுக்கு முன்பும் இப்படி சொல்லிட்டு அதிமுகவோட ஏன் கூட்டணி வச்சீங்கன்னு சிலர் கேட்டாங்க. பதவிக்கு ஆசைபட்டவன் நான் இல்ல. அந்த அம்மாவிடம் எந்த பதவியையும் நான் கேட்கவில்லை. மக்கள் பிரச்னைக்காக மட்டுமே அதிமுகவோட கூட்டணி வச்சேன். பணம் வாங்கிட்டு தேமுதிக தனியா ஒதுங்கிட்டாங்க என்ற பேச்சு வந்திரக்கூடாது என்பதற்காகவும் கூட்டணி வச்சேன். எங்க எம்எல்ஏக்கள் எல்லாம் வறுமையில இருக்காங்க காசு கொடுத்து வாங்கிடலாம்னு தப்பு கணக்கு போடாதீங்க. இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
பொதுச்செயலாளராக வும் விஜயகாந்த்: தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளராக ராமு வசந்தன் பதவி வகித்து வந்தார். அவர் காலமானதை தொடர்ந்து அந்த பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், பொதுக்குழுவின் மீண்டும் கட்சி தலைவராக விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் காலியாக இருந்த பொதுச் செயலாளர் பதவியும் விஜயகாந்த்துக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார்.
No comments:
Post a Comment