கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சிமடம் மீனவர்கள் 22 பேரை, அவர்களது 5 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் காலை, 622 விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றன. இரவு 10 மணியளவில் 100க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகுகள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தன. அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜெயசிங், சேகரன், சகாயம் உள்பட 5 பேரின் விசைப்படகுகளை சிறைப்பிடித்தனர்.
இப்படகுகளில் தொழிலுக்குச் சென்ற தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் தோமஸ், மில்டன், செருமஸ், முருகேசன், ரமேஷ், யோகன், கில்டூஸ், செல்லையா, மில்டர், ஜான் போஸ், சகாயம் உள்பட 22 பேரை 5 விசைப்படகுகளுடன் சிறைப்பி டித்துச் சென்றனர். இதனால் அச்சமடைந்த பிற பகுதிகளில் மீன்பிடித்த மீனவர்கள் நள்ளிரவிலிருந்து கரை திரும்பினர். இந்தச் சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்துச் செல்கிறது. சில நேரங்களில் கண் மூடித்தனமாக மீனவர்களைத் தாக்குகின்றனர். இதில் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, ஜெகதாபட்டினம் மீனவர்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர். சில மீனவர்கள் துப்பாக்கி சூட்டிற்கு பலியாகியுள்ளனர். நவ. 28ல் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேர் மீது போதைப் பொருள் கடத்தியதாக வழக்குத் தொடரப்பட்டு கடந்த 12 வாரங்களுக்கும் மேலாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை விடுவிக்க மீனவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், பிரதமர் மன்மோகன் சிங், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா மார்ச் 3, 4 தேதிகளில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக் கானோர் பங்கேற்க உள்ள நிலையில் இந்த சம்பவம் பதற் றத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment