இந்தியாவில் ஓரினச் சேர்க்கையை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருந்த நிலையில், இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தது.
இதனால் கடுப்பான உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, தங்களது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று எரிச்சலையும் வெளிப்படுத்தினர்.
ஓரினச் சேர்க்கை தவறல்ல எனறு கடந்த 2009ம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஓரினச் சேர்க்கைக்கு எதிராக அப்பீல் செய்துள்ளவர்களில் தமிழ்நாடு முஸ்லீ்ம் முன்னேற்றக் கழகம், பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் அடங்குவர்.
இந்த மனுக்களை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந் நிலையில் கடந்த 23ம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் என்று கூறி மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிபி மல்ஹோத்ரா ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
அதில், ஓரினச்சேர்க்கை முற்றிலும் ஒழுக்ககேடான செயல். இது இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், சமூக ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறைக்கு எதிரானது. மேலும் இது இயற்கைக்கும் முரணானதாகும். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் கலாச்சாரம் உலகளவில் பேசப்படும் உயர்வான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்திய கலாச்சாரம் மற்ற கலாச்சாரங்களை விட மாறுபட்டது. எனவே, ஓரினச் சேர்க்கையை இந்தியாவில் அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், இதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று உள்துறை அமைச்சகம் ஜகா வாங்கியது. மத்திய அரசின் இந்த தடுமாற்றமான நிலைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந் நிலையில் ஓரினச் சேர்க்கைக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவுக்கு ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது.
ஹோமோ இஸ் ஓ.கே-நலத்துறை அமைச்சகம்:
இந் நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு இன்று மீண்டும் ஒரேயடியாக 'அந்தர் பல்டி' அடித்தது.
இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஓரினச் சேர்க்கை குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்தை ஏற்கிறோம் (அதாவது, ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கிறோம்) என்று கூறப்பட்டிருந்தது.
ஏற்கனவே, இந்த விஷயத்தில் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வரும் மத்திய அரசு இன்று அடித்த அந்தர் பல்டியும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை எரிச்சல் அடைய வைத்துவிட்டது. நீதிமன்ற நடவடிக்கைகளை கேலிக்குறியதாக்காதீர்கள், எங்களது நேரத்தை வீணடிக்காதீர்கள். ஓரினச் சேர்க்கை விவகாரத்தை கேலிக்குறியதாக்கி விடாதீர்கள் என்று காட்டமாகக் கூறினர்.
No comments:
Post a Comment