இந்திய அணிக்கு மூன்று கேப்டன்களை நியமிப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த "பார்முலா' ஏற்கனவே இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய அணிகளில் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டுள்ளது. வரும் 2013ல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற இருப்பதாக தோனி அறிவித்துள்ள நிலையில், அடுத்த கட்ட மாற்றத்துக்கு இந்திய அணி ஆயத்தமாகிறது.
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்திக்க, விமர்சனக் கணைகளில் சிக்கித் தவிக்கிறது. இது போதாதென்று கேப்டன் தோனி, சேவக் இடையிலான மோதலும் நிலைமையை மோசமாக்கியது. தற்போதைய பிரச்னைகளுக்கு தீர்வாக, டெஸ்ட், ஒருநாள் போட்டி, "டுவென்டி-20' என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கேப்டன்களை நியமிக்க வேண்டுமென முன்னாள் வீரர் கங்குலி கூறினார். தற்போது அதிகமான கிரிக்கெட் போட்டிகள் இருப்பதால், இம்முறையை தேர்வாளர்கள் கையாளலாம் என "ஐடியா' கொடுத்தார். இதனை ஏற்கனவே இங்கிலாந்து(ஸ்டிராஸ், அலெஸ்டர் குக், ஸ்டூவர்ட் பிராட்), தென் ஆப்ரிக்கா(கிரேம் ஸ்மித், டிவிலியர்ஸ்), ஆஸ்திரேலிய(மைக்கேல் கிளார்க், ஜார்ஜ் பெய்லி) அணிகள் பின்பற்றி வருகின்றன. முன்பு இந்திய அணியில் கூட கும்ளே(டெஸ்ட்), தோனி(ஒருநாள், "டுவென்டி-20') என இரண்டு கேப்டன்கள் இருந்தனர். கும்ளே ஓய்வுக்கு பின் தான் தோனியின் தனிஆவர்த்தனம் ஆரம்பமானது.
காம்பிர் வாய்ப்பு:
தோனியை பொறுத்தவரை டெஸ்டில் பெரிதாக சாதிக்க முடியவில்லை. இவரது தலைமையில் இந்திய அணி தொடர்ந்து 7 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. தவிர, 2013ல் டெஸ்டில் இருந்து விடைபெற திட்டமிட்டுள்ளார். சச்சின், லட்சுமண், டிராவிட் ஆகியோர் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்டில் கேப்டனாக சேவக் சோபிக்கவில்லை. இவர்களை தவிர்த்தால் காம்பிர், 30, மட்டுமே "சீனியர்' வீரராக உள்ளார். இவரை டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கலாம். ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் அணியை வழிநடத்திய அனுபவம் உண்டு. போராடும் குணம் கொண்ட இவர், களத்தில் கங்குலியை போல கண்டிப்புடன் நடந்து கொள்வார்.
தோனி தொடரட்டும்:
ஒருநாள் போட்டிகளில் தோனி, 30, அசைக்க முடியாத வீரர். அணிக்கு உலக கோப்பை வென்று தந்த பெருமைமிக்கவர். டெஸ்டில் சோபிக்காத இவர், ஒருநாள் அரங்கில் தொடர்ந்து அசத்துகிறார். இதுவரை 201 போட்டிகளில் 6,688 ரன்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 51.44. "மேட்ச் வின்னரான' இவர், தேவைப்பட்டால் கடைசி பந்தில் கூட சிக்சர் அடித்து வெற்றித் தேடித் தருவார். இந்திய அணிக்கு அனைத்து விதமான போட்டிகளிலும் கேப்டனாக உள்ள இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தலைமை வகிக்கிறார். இவரது சுமையை குறைக்கும் பொருட்டு, டெஸ்ட் போட்டிக்கு "பிரேக்' தரலாம். ஒருநாள் போட்டிகளில் மட்டும் கேப்டனாக தொடரலாம்.
வருகிறார் கோஹ்லி:
தோனி ஏற்கனவே "டுவென்டி-20' உலக கோப்பை வென்று விட்டார். இனி இந்த வகை கிரிக்கெட்டில் இவர் சாதிக்க ஒன்றும் இல்லை. எனவே, "டுவென்டி-20' அணியின் கேப்டன் பொறுப்பை இளம் வீரரான விராத் கோஹ்லி, 23, வசம் ஒப்படைக்கலாம். இவர், இந்திய அணிக்கு ஜூனியர் உலக கோப்பை வென்று தந்தவர். ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில் பெங்களூரு அணிக்காக ரன் மழை பொழிந்துள்ளார்.
மூன்று கேப்டன் "பார்முலா'வை இந்திய கிரிக்கெட் போர்டு சோதனை ரீதியாக அமல்படுத்தி பார்க்கலாம். இதில், வெற்றி கிடைக்கும்பட்சத்தில், இந்திய அணி தோல்வி பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
No comments:
Post a Comment