கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்திற்கு அமெரிக்காவில் உள்ள தொண்டு நிறுவனங்களிடமிருந்து நிதியுதவி வருவதாக குற்றம் சாட்டிய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமார்.
தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பிரதமர் பேசியுள்ளதாக கூறி அந்த நோட்டீஸில் குற்றம் சாட்டியுள்ளார் உதயக்குமார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள நோட்டீஸில்,
நீங்கள் அளித்த பேட்டி, ஆங்கில நாளிதழ் ஒன்றில் கடந்த 25-ந் தேதி வெளியானது. அதில், `விவசாய உற்பத்திக்கு மரபுசார் தொழில்நுட்பத்தை பயன்படுத்த அரசு ஆர்வம் காட்டுகிறது. ஆனால், அமெரிக்காவை பின்புலமாகக் கொண்ட என்.ஜி.ஓ.க்கள் சிலர், இதை விரும்பவில்லை. இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
இந்தியாவின் சில வளர்ச்சிப் பணிகளையும் அமெரிக்கா மற்றும் போலாந்து, நார்வே உள்ளிட்ட ஸ்காண்டினேவியன் நாடுகளின் பண உதவிபெறும் என்.ஜி.ஓ.க்கள் ஆதரிப்பதில்லை. இதுபோன்ற என்.ஜி.ஓ.க்கள்தான் அணுசக்தித் திட்டங்களுக்கும் எதிராக இருப்பதால், அந்தத் திட்டங்களை செயல்படுத்துவதில் பிரச்சினை ஏற்படுகிறது.
கூடங்குளத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. சீனா போல் அல்ல. அமெரிக்காவை பின்புலமாகக் கொண்ட என்.ஜி.ஓ.க்கள், மின்சக்தி உற்பத்தியை இந்தியா அதிகரிப்பதை விரும்பவில்லை என்றே நினைக்கிறேன்.
புகுஷிமா அணு உலை வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகும்கூட, இந்தியாவைச் சேர்ந்த அறிவுசார் சமுகத்தின் பெரும்பாலானோர், அணு உலை மூலம் கிடைக்கும் மின்சாரத்தை வரவேற்கின்றனர்' என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள்.
இது, எனது கட்சிக்காரர் உதயகுமாரை மிகவும் பாதித்துவிட்டது. அணுமின் நிலையத்தை எதிர்த்து கூடங்குளத்தில் நடக்கும் போராட்டம், அமெரிக்கா மற்றும் ஸ்கேண்டினேவியா நாடுகளின் பண உதவியோடு நடைபெறுவதுபோல், மக்களிடம் நீங்கள் அந்த கருத்தை கூறியுள்ளீர்கள் என்று தெரிகிறது.
உங்களது இந்த கருத்திற்கு ஆதாரம் எதுவும் இல்லை. உங்கள் கருத்து பொய்யானது. பொய்யான கருத்தைக் கூறியதன் மூலம், மக்களிடையே உதயகுமாருக்கு இருந்த நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். இதன்மூலம் அவரது குணநலன் பற்றி மக்கள் குறைவாக எடைபோடுகிறார்கள்.
எனவே நீங்கள் தெரிவித்த அந்த கருத்துகளை திரும்பப்பெற வேண்டும். அல்லது மாற்றி கூறவேண்டும். இல்லாவிட்டால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் உதயக்குமார்.
No comments:
Post a Comment