தேர்தல் ஏற்பாடுகளின்போது மின்சாரம் தடைபட்டாலும் ஓட்டுபதிவு இயந்திரங்களுக்கு பாதிப்பு இல்லை. ஆனால் வெளிச்சத்திற்காக பெட்ரோமாக்ஸ், ரீசார்ஜ் விளக்குகளை பயன்படுத்தி தேர்தல் நடத்துவோம் என்று கூறியுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்.
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், நேற்று நெல்லை ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது, கூடுதல் தேர்தல் அதிகாரி ராஜேந்திரன், நெல்லை கலெக்டர் செல்வராஜ், தேர்தல் தாசில்தார் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக சந்தித்து கருத்துக்களையும், புகார்களையும் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நேர்மையாகவும், சுமூகமாகவும் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. தொகுதிக்குள் இலவச பொருட்கள் தர அனுமதி கிடையாது. அரசின் பொருட்கள் இருக்கும் கோடவுன்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு அரசு கார்களை பயன்படுத்தக்கூடாது. அமைச்சர்களுடன் தமிழக அரசு அதிகாரிகள் சென்றால் சஸ்பெண்ட் செய்யப்படுவர்.
தேர்தல் ஏற்பாடுகளின்போது மின்சாரம் தடைபட்டாலும் ஓட்டுபதிவு இயந்திரங்களுக்கு பாதிப்பு இல்லை. ஆனால் வெளிச்சத்திற்காக பெட்ரோமாக்ஸ், ரீசார்ஜ் விளக்குகளை பயன்படுத்தி தேர்தலை நடத்துவோம்.
பிரசாரத்திற்கு வெளியூர் ஆட்கள் வரலாம். ஆனால் மார்ச் 16ம் தேதி மாலை வெளியேறி விட வேண்டும். தேர்தல் பாதுகாப்பிற்கு துணை ராணுவ படை, வெளிமாநில போலீஸ் படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள். கண்காணிப்பு பணியில் பகலில் ஐந்தும், இரவில் ஐந்துமாக 10 பறக்குப்படைகள் ஈடுபடுத்தப்படும்.
நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களில் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் விளம்பர பலகைகள், சுவர் விளம்பரங்களுக்கு தடை உள்ளது. கிராமப்புறங்களில் அனுமதிபெற்று விளம்பரம் வரையலாம்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விளம்பர பலகைகளும் வைக்க அனுமதியில்லை.
மக்களின் ஒத்துழைப்போடு இந்த தேர்தலை நடத்த உள்ளோம். தேர்தல், பிரசாரத்தில் விதிமீறல் இருந்தால் பொதுமக்களே புகார் செய்யலாம். ரூ. 2.5 லட்சம் வரையிலும் ரொக்கமாக எடுத்துச் செல்லலாம். ஆனால் அவற்றிற்கு உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவைப்பட்டால் சங்கரன்கோவிலில் நேரில் ஆய்வு மேற்கொள்வேன். இந்த முறை தேர்தலில் நூறு சதவீத வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. எனவே பூத் சிலிப், அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டே ஓட்டுப்பதிவு நடக்கும். பூத் சிலிப்புகளை அரசு ஊழியர்கள் வழங்குவார்கள். கட்சிகளும் சின்னம் இல்லாமல் வழங்கலாம்.
தேர்தலின் போது வேட்பாளர்கள் அதிகபட்சமாக 16 லட்சம் ரூபாய் மட்டுமே செலவழிக்கலாம். தேர்தலை கண்காணிக்க அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன என்றார்.
No comments:
Post a Comment