தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. 30-ந்தேதி வரை தேர்வு தொடர்ந்து நடக்கிறது.
வேலூர், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 38 ஆயிரத்து 854 மாணவ, மாணவிகள் தேர்வு எழுகிறார்கள். பிளஸ்-2 தேர்வு ஏற்பாடு குறித்து தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம் வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் இன்று நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பொன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அதிகாரிகள் பூபதி, நாராயணசாமி முன்னிலை வகித்தனர். இதில் தலைமை ஆசிரியர்களுக்கு பிளஸ்-2 தேர்வுக்கான ஆணை வழங்கப்பட்டன.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் வருகிற 8-ந்தேதி பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார். இதேபோல் வேலூர் ஜெயிலில் உள்ள மற்றொரு கைதி சசிகரன் என்பவரும் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்.
இவர்களுக்காக வேலூர் ஜெயிலில் பிளஸ்-2 தேர்வு மையம் அமைக்கப்படுகிறது. கைதிகளுக்காக ஜெயிலில் பிளஸ்-2 தேர்வு மையம் அமைப்பது இதுவே முதல் முறையாகும்.
பேரறிவாளன் ஏற்கனவே டிப்ளமோ படித்துள்ளார். இந்த ஆண்டு வேலூர், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 8 புதிய பிளஸ்-2 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது.
வேலூர் கல்வி மாவட்டத்தில் சைனபுரம், பென்னாத்தூர், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் குடியாத்தம், நத்தம், ஜாட்டியாபள்ளி, கொரட்டி, வெலக்கல்நத்தம், சிருஷ்டி மேல்நிலைப்பள்ளிகளில் புதிதாக பிளஸ்-2 தேர்வு மையம் அமைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment