ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதில் இந்திய வீரர் சச்சின் சோர்ந்து போன நிலையில் உள்ளார். ஆனால் அதனை அவரிடம் கூற அணி தேர்வாளர்கள் பயப்படுகின்றனர், என்று முன்னாள் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் (39). தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சச்சின், ஒருநாள் போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெற வேண்டும் என்று பல முன்னாள் இந்திய வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் சில முன்னாள் வீரர்கள், சச்சினுக்கு ஆதரவான கருத்துகளும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் டீன் ஜோன்ஸ், சச்சினுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து டீன் ஜான்ஸ் கூறியதாவது:
கிரிக்கெட் பிரபலங்கள் ரிக்கி பான்டிங், சச்சின் ஆகியோர் உட்பட யாருக்கும் ஓய்வு பெறுவதற்காக காலம் காத்திருக்காது. ஒருநாள் போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பான்டிங், ஆஸ்திரேலியா அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதேபோல ஒருநாள் போட்டிகளில் சொதப்பி வரும் சச்சினை ஓய்வு பெறுமாறு கூற, இந்திய தேர்வாளர்களில் யாருக்கும் தைரியம் இல்லை.
இந்திய அணியில் இருந்து சச்சினை நீக்கினால், நீக்கியவர்களின் வீடுகள் தாக்கப்பட்டலாம் என்ற அச்சமும் அணி தேர்வாளர்களின் மனதில் உள்ளது. இதனாலேயே சச்சினின் விருப்பத்திற்கு எதிராக அவரை அணியில் நீக்க தேர்வாளர்கள் பயப்படுகின்றனர்.
மேலும் விளம்பரதார நிறுவனங்கள் சச்சின் அணியில் நீடிப்பதையே விரும்புகின்றன. அவர்களுக்கு வருமானம் முக்கியம். இந்த நிலையில் சச்சின் போன்றவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை தற்போது முடிவுக்கு கொண்டு வந்தால், விளம்பர நிறுவனங்களின் அதிருப்தியும் சந்திக்க நேரிடும்," என்றார்.
No comments:
Post a Comment