மதுரையில் மகாத்மா காந்தியடிகள் தனது மேலாடையைத் துறந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வு நடந்த இல்லத்திற்கு எதிரே டாஸ்மாக் மதுக்கடை ஒன்று திறக்கப்படுகிறது. இது மதுரை மக்களையும், காந்தியாதிகளையும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது.
மதுரை மேலமாசி வீதியில் உள்ள இல்லம் ஒன்றில்தான் தனது மேலாடையைத் துறந்த அரை நிர்வாண கோலத்திற்கு மாறினார் மகாத்மா காந்தி. இறுதிவரை அந்த அரை நிர்வாணத்தில்தான் அவர் நமது நாட்டுக்காககப் போராடினார், லண்டன் வட்ட மேசை மாநாடுகளுக்கும் போனார். உலகமே காந்தியின் எளிமையைக் கண்டு வியந்து பாராட்டியது. அவர் அந்த எளிமைக் கோலம் பூண்டநகரம் தான் மதுரை.
இப்படிப்பட்ட இல்லம் இன்று நினைவில்லமாக அமைந்துள்ளது. ஆனால் தற்போது அந்த இல்லத்திற்கும், மகாத்மா காந்தியடிகளுக்கும் பெருத்த அவமானம் தரக் கூடிய ஒரு செயல் மதுரையில் நடந்து கொண்டிருக்கிறது. அவர் எந்த இல்லத்தில் இருந்தபடி தனது மேலாடையைத் துறந்தாரோ, அந்த இல்லத்திற்கு எதிர்புறம் ஒரு டாஸ்மாக் மதுக்கடை வரப் போகிறது. மதுவுக்கு எதிராக போராடிய காந்திக்கு இப்படி ஒரு அவமானம்.
காந்தி தனது உடையைத் துறந்த இல்லத்தில் தற்போது சர்வோதயா அலுவலகம் உள்ளது. இதற்கு எதிர்புறத்தில் ஒரு கோவில் உள்ளது. அதற்கு அருகே சித்திரைத் திருவிழாவின்போது மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளும் கட்டி செட்டி மண்டபம் உள்ளது. காந்தியடிகள் நினைவில்லத்திற்கு அருகே பள்ளிவாசல் ஒன்று உள்ளது. இப்படிப்பட்ட இடங்களுக்கு மத்தியில் டாஸ்மாக் மதுக் கடையை திறக்கும் செயல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் இதுதொடர்பாக மக்கள் தரப்பில் பெட்டிஷன்கள்கள் பாயத் தொடங்கியுள்ளன. சகாயம் காந்தி கெளரவத்தைக் காப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment