பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா விரைவில் அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளார். தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் நாகார்ஜுனா. பழம் பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவின் மகன். 52 வயதாகும் நாகார்ஜுனா, தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். நடிகை அமலாவின் கணவர். இவருடைய 2 மகன்களில் ஒருவரான நாக சைதன்யா, தெலுங்கு படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார். மற்றொரு மகன் அகிலும், விரைவில் திரையுலகத்துக்கு வர உள்ளார். ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி அரசியலுக்கு வந்து, பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அவருடைய கட்சியை சேர்ந்த 18 பேர் எம்எல்ஏக்கள் ஆகினர். அவர்களுடன் காங்கிரசில் சேர்ந்து விட்டார் சிரஞ்சீவி. மற்றொரு பிரபல நடிகரான பாலகிருஷ்ணா, தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து 2014ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட போவதாக சமீபத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில், திருப்பதியில் நேற்று நடைபெற்ற நகைக்கடை திறப்பு விழாவில் நாகார்ஜுனா கலந்து கொண்டார். அப்போது அரசியலுக்கு வருவது பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, அரசியலை நான் ஆர்வமாக கவனிப்பவன். அதில் ஈடுபட வேண்டும் என்று நீண்ட காலமாக நினைக்கிறேன். ஆனால், அது எனக்கு சரிப்பட்டு வருமா என்று தெரியவில்லை. முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி அமல்படுத்திய பல திட்டங்கள் எனக்கு பிடிக்கும் என்றார். ராஜசேகர ரெட்டியை பற்றி நாகார்ஜுனா புகழ்ந்து பேசியதால் அவர் காங்கிரசில்தான் சேருவார் என்றும், ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரசில் சேருவார் என்றும் ஆந்திராவில் மக்கள் இப்போதே விவாதிக்க தொடங்கி விட்டனர்.
No comments:
Post a Comment