கடுமையான மின்வெட்டால் தமிழகம் இருண்டுவிட்டது. இதை மறைக்கவே சசிகலா குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். மின்வெட்டை கண்டித்து பாமக சார்பில் அரிக்கேன் விளக்கு ஏந்தும் போராட்டம் மற்றும் கண்டன ஆர்பாட்டம் திருச்சி புத்தூர் 4 ரோடு பகுதியில் நேற்று மாலை நடந்தது. இதில் கலந்துகொண்ட கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: தமிழகம் மின்வெட்டு காரணமாக இருண்டு கிடக்கின்றது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிலைமையை உடனே சரிசெய்துவிடுவோம் என ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் மின்வெட்டை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் மின் வெட்டு காரணமாக சுமார் 7 கோடி பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் விவசாயம், மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சீர்குலையும் நிலையில் அதிமுகவின் ஆட்சி உள்ளது. இதை மக்களிடம் இருந்து மறைக்கவே சசிகலா குடும்பத்தாரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். ஐந்தாண்டு திட்டங்கள் எத்தனை கொண்டு வந்தாலும் மின்வெட்டை சரிசெய்ய முடியாது. அதிமுக ஆட்சியில் நீடிக்கும் வரை இன்னும் 5 ஆண்டுகளுக்கு தமிழகம் இருண்டுதான் கிடக்கும். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
No comments:
Post a Comment