சங்கரன்கோவில் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியக்குமார் மீது நில அபகரிப்பு வழக்கு நிலுவையில் உள்ளதால், அவர் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சங்கரன்கோவில் நகராட்சி திமுக கவுன்சிலராக உள்ள சங்கர் புதிய வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.
காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருணாச்சலத்தின் தம்பி மகன்தான் ஜவஹர் சூரியக்குமார். இவருக்குத்தான் தற்போது திமுக சார்பில் போட்டியிட கட்சி மேலிடம் சீட் கொடுத்துள்ளது. ஆனால் ஜவஹர் சூரியக்குமார் மீதான ஒரு விவகாரம் தற்போது அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜவஹர் சூரியக்குமார் மீது நெல்லை கோர்ட்டில் ஒரு கிரிமினல் மோசடி வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகிறது. அருணாச்சலத்திற்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலம், செங்கோட்டை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், செங்கோட்டைக்கும், கட்டளைக்குடியிருப்புக்கும் இடையே இருக்கிறது.
அருணாச்சலம் மறைவுக்குப் பின்னர் இந்த நிலத்தை தனக்கு அருணாச்சலம் உயில் எழுதி வைத்துள்ளதாக கூறி தனது பெயரில் மாற்றிப் பதிவு செய்து விட்டாராம் ஜவஹர் சூரியக்குமார். இதையடுத்து அருணாச்சலம் குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்தனர். ஆனால் போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையை அணுகினர். அங்கிருந்து உத்தரவு கிடைத்தவுடன் ஜவஹர் சூரியக்குமார் மீது 2001ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்போது நெல்லையில் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது வழக்கு.
இந்த விவகாரத்தை திமுக மேலிடத்திற்கு ஜவஹர் சூரியக்குமார் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மாற்றும் முடிவுக்கு திமுக மேலிடம் வந்துள்ளதாக தெரிகிறது.
அவருக்குப் பதில் நகராட்சி திமுக கவுன்சிலர் சங்கருக்கு சீட் தரப்படும் என்றும் பேச்சு அடிபடுகிறது.
யார் இந்த சங்கர்?
இதற்கிடையே இந்த சங்கர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர் வேறு யாருமல்ல, திமுக ராஜ்யசபா எம்.பி. தங்கவேலுவின் மருமகனாம். அதாவது சகோதரி மகன். தங்கவேலு முன்னாள் மாநில அமைச்சரும் ஆவார். தங்கவேலு அழகிரியின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.
நாளை இருவரும் மனு தாக்கல்
இந்தநிலையில் நாளை திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜவஹர் சூரியக்குமாரும், வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படும் சங்கரும் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
சங்கர் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்வாரா அல்லது அதிகாரப்பூர்வ வேட்பாளராக மனு தாக்கல் செய்வாரா என்பது தெரியவில்லை.
திமுகவில் பரபரப்பு
இந்தப் புதிய சூழ்நிலையில் சங்கரன்கோவில் திமுக வட்டாரம் பெரும் பரபரப்படைந்துள்ளது.
No comments:
Post a Comment