நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அரிய தினம் பிப்ரவரி 29. லீப் ஆண்டில் வரும் நாள் என்பதால் பெரும்பாலான தாய்மார்கள் தங்களின் குழந்தை பிறப்பை ஒரு நாள் தள்ளிவைத்திருக்கின்றனர். இன்றைக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்று நினைத்தும், பிப்ரவரி 29 அதிர்ஷ்டமற்ற தினம் என்று எண்ணியும் சிசேரியன் செய்ய மறுத்துள்ளனர்.
லீப் ஆண்டில் வரும் பிப்ரவரி 29-ந்தேதியை உலகம் முழுவதிலும் அரிதான நாளாக கருதப்படுகிறது. பூமியானது சூரியனை சுற்றிவர 365 நாட்களையும், 5 மணிநேரம், 49 நிமிடங்கள், 19 விநாடிகளை எடுத்துக்கொள்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அது கணக்கிடப்பட்டு லீப் வருடமாக ஒரு வருடத்திற்கு 366 நாட்களாக கணக்கிடப் படுகிறது. லீப் வருடத்தில் பிப்ரவரிக்கு 29 நாட்கள் வரும். இந்த நாள் உலகம் முழுவதும் அரிய நாளாக கொண்டாடப்படுகிறது.
துரதிர்ஷ்ட தினம்
இந்நாள் 4 ஆண்டுக்கு ஒருமுறையே வரும் என்பதால் சிசேரியன் ஆபரேசன் மூலம் குழந்தை பெறும் பெண்கள் இந்த நாளில் குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்புவதில்லை. காரணம் இந்நாளில் தங்களுக்கு பிறக்கும் குழந்தையின் பிறந்தநாளை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கொண்டாட முடியும் என்பதுதான்.
சென்னையில் உள்ள பிரபல தனியார் மகப்பேறு மருத்துவமனைகளில் இன்று ஏராளமான பெண்களுக்கு குழந்தை பிறக்க இருந்தது. ஆனால் பாதிக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் இன்று பிப்ரவரி 29 என்பதால் நாளைக்கு குழந்தை பிறப்பை தள்ளி வைத்துவிட்டனர். அதற்குக் காரணம் பல கர்ப்பிணிகள் பிப்ரவரி 29-ந்தேதியை அதிர்ஷ்டம் இல்லாத நாளாகவும் கருதியதுதான்.
இவர்களில் சிலருக்கு குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருந்ததால் ஒருநாள் முன்னதாகவே அதாவது பிப்ரவரி 28 ம் தேதி அன்றே சிசேரியன் ஆபரேசன் செய்யப்பட்டது. இந்த விஷயத்தில் கிறிஸ்தவர், இந்துக்கள் என்ற பேதமே இல்லை. அனைத்து மதத்தை சேர்ந்த பெண்களும் பிப்ரவரி 29-ந்தேதியை அதிர்ஷ்டம் இல்லாத நாளாகவே கருதுகிறார்கள். இதனால் நாங்கள் வேறு வழியில்லாமல் இன்று நடக்க இருந்த சிசேரியன் ஆபரேஷன் நாளைக்கு தள்ளி வைத்தோம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வெறிச்சோடிய மண்டபங்கள்
பிப்ரவரி 29-ந்தேதி அன்று திருமணம் செய்தால் 4 ஆண்டுக்கு ஒருமுறைதான் திருமண நாள் கொண்டாட முடியும் என்பதால் நிறைய ஜோடிகள் இன்று நடக்க இருந்த திருமணத்தை வேறு தேதிகளுக்கு தள்ளி வைத் தனர். இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திருமண மண்டபங்கள் இன்று வெறிச்சோடி காணப்பட்டன. ஆனால் இது தவறான கருத்து என்று பெரும்பாலோனோர் தெரிவித்துள்ளனர்.
கின்னஸ் சாதனை
ஆனால் அயர்லாந்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று தலைமுறைகளாக பிப்ரவரி 29 ம் தேதி பிறந்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். 1940 பிப்ரவரி 29 ல் தாத்தா பீட்டர் அந்தோனி பிறந்தார். அவரது மகன் பீட்டர் எரிக் பிறந்தது 1964 பிப்ரவரி 29. அதேபோல் பீட்டர் எரிக்கின் மகள் பெத்தானி வெல்த் பிறந்தது 1996 பிப்ரவரி 29ம் தேதி. இந்த சாதனைக்காக இவர்களின் குடும்பம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவில் பிப்ரவரி 29ம் தேதி பிறந்த மொராய்ஜி தேசாய் நாட்டின் பிரதமராக உயர்ந்தார். எனவே பிப்ரவரி 29 என்பது துரதிர்ஷ்ட தினம் அல்ல அதிர்ஷ்ட தினமே என்பது பெரும்பாலோனோரின் கருத்து.
No comments:
Post a Comment