உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி காயத்தால் அவதிப்பட்டு வருகிறது.
11வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வருகிற 14 ஆம் தேதி தொடங்குகிறது. போட்டிக்கு இன்னும் 11 நாட்களே இருக்கும் நிலையில் இந்திய அணி வீரர்கள் சிலர் காயத்தால் அவதிப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரோகித் சர்மா முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் ஆட்டத்தில் காயம் அடைந்தார். இதனால் அவர் எஞ்சிய போட்டி தொடரில் விளையாடவில்லை.
இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா ஆகியோரும் முழு உடல் தகுதியுடன் இல்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இஷாந்த் ஷர்மா முழங்கால் வலியால் அதிகம் சிரமப்பட்டு வருவதால் அவர் உடல் தகுதி பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.
காயத்தால் அவதிப்பட்டு வரும் வீரர்களுக்கு அடிலெய்டில் வருகிற 5ஆம் தேதி உடல் தகுதி சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதற்கிடையில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய மொகித் ஷர்மா, குல்கர்னி ஆகியோரை மறு உத்தரவு வரும் வரை நாடு திரும்ப வேண்டாம். உலகக்கோப்பை அணியினருடன் தங்கி இருக்கும் படி இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. வீரர்கள் யாரும் தகுதி பெறாமல் போனால் இவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. வீரர்கள் காயம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் வெளிப்படையாக பேச மறுத்துவிட்டனர்.
உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி அடிலெய்டில் நடைபெறும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. 8ஆம் தேதி ஆஸ்திரேலியாவையும், 10ஆம் தேதி ஆப்கானிஸ்தானையும் சந்திக்கிறது. ‘பி’ பிரிவில் இடம் பிடித்து இருக்கும் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் (அடிலெய்டு, 15ஆம் தேதி) பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
பெர்த்தில் நேற்று முன்தினம் நடந்த முத்தரப்பு கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 24 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் அரை சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்த பவுல்க்னெர் பீல்டிங் செய்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார். விலா பகுதியில் ஏற்பட்டுள்ள அவரது காயத்தின் தன்மை குறித்து முழுமையாக தெரியவில்லை. இருப்பினும் உலகக்கோப்பை போட்டி தொடங்க சில நாட்களே இருப்பதால் அவர் தகுதி பெறுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment