‘உங்களை யாரிடமும் அடகு வைக்க மாட்டேன்’ என்று தன் தொண்டர்களிடம் தே.மு.தி.க. தலைவர் சேலம் மாநாட்டில் சூளுரைத்து உள்ளார். அதாவது யாரிடமும் கூட்டணி சேர மாட்டேன் என்று கூறுகிறார் தலைவர் என்று தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தாலும், ‘கூட்டணி தேவை என்போர் கையை உயர்த்துங்கள்’ என்று கூற, ஒட்டுமொத்த தொண்டர்களும் கையை உயர்த்தி விட்டனர்.
‘இனியும் உங்கள் சால்ஜாப்பு பலிக்காது தலைவா, தனியாக நின்று நாங்கள் இழந்தது போதும்’ என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள் விஜயகாந்த் ரசிகர்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்து போட்டியிட்டு தான் ஒருவர் மட்டுமே வென்றால் போதும், வரவேண்டிய இடத்திலிருந்து வரவேண்டியது வந்தால் போதும் என்ற நினைப்பு விஜயகாந்துக்கு. இந்தத் தேர்தலிலும் அதே வேலையைக் காட்டலாம் என்று நினைத்தாலும், ‘நீ எங்களை அடகு வைத்தாலும் பரவாயில்லை, நாங்கள் கட்சிக்காக அடகு வைத்த நகைகளை மீட்க வேண்டும்’ என்று எரிமலையாய் நெஞ்சுக்குள் வெடிக்கிறார்கள் அப்பாவித் தொண்டர்கள். ‘விஜயகாந்தை கேப்டன் கேப்டன் என்று வாயாரப் புகழ்வார், கட்சி பத்திரிகையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர். இப்போதெல்லாம் விஜயகாந்த் ஒரு சுயநலவாதி, நாங்கள் எல்லாம் ஏமாந்து விட்டோம் என்று புலம்புகிறார்’ என்றார் பத்திரிகை நண்பர் ஒருவர். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, காங்கிரஸிடம் மிகப்பெரும் தொகையை வாங்கிக் கொண்டுதான் விஜயகாந்த் தனித்து நின்றாராம். அதனால்தான் தி.மு.க. வென்றது. இந்தத் தேர்தலிலும் அ.தி.மு.க.வோடு தொகுதி பங்கீட்டில் பிரச்சனை வந்துவிட்டது. நமக்குத் தன்மானம் தான் முக்கியம் என்று சொல்லி, மீண்டும் தனித்து நின்று, தி.மு.க.வை ஆட்சிக்கட்டிலில் அமர வைக்கப்போகிறார் எங்கள் தலைவர் என்று விஜயகாந்த் ரசிகர்களே வெளிப்படையாகப் பேசத் தொடங்கி விட்டனர்.
கலைஞர், ஜெயலலிதா போன்றவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுத்து பதவிக்கு வந்து, வட்டியும் முதலுமாக அறுவடை செய்கின்றனர். வைகோ, ராமதாஸ் போன்றவர்கள் கடைசி வரை இந்த கட்சிகளுக்கு முட்டுக்கொடுத்தே முடிந்து விட்டனர். ஆனால் விஜயகாந்த் மட்டும் ஆட்சிக்கு வராமலேயே வாய்ச்சவடால் அடித்தே கோடிகளில் புரள்கிறார். அப்பாவி ரசிகர்கள்தான் நட்டாற்றில் நிற்கிறார்கள். ரஜினி எவ்வளவோ மேல். ‘வாய்ஸ்’ கொடுத்துவிட்டு ஐஸ்வர்யாரோடு ‘கிளிமாஞ்சாரோ’ பாடிவிட்டு பணம் சம்பாதிக்கிறார். ரசிகர்களுக்கு நல்ல படமாவது தருகிறார். ஆனால், ‘கேப்டன்’ கடைசிரை தான் மட்டுமே ‘பேட்டிங்’ செய்ய வேண்டும். ரசிகர்கள் ‘பீல்டர்களாகவே’ இருந்து வியர்வை சிந்த வேண்டும் என்று நினைக்கிறார்.
உண்மையிலேயே விஜயகாந்த் மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறவராக இருந்தால், தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்று தான்தான் என்று நனைத்திருந்தால், இந்நேரம் மூன்றாவது அணிக்கு தலைமையேற்று இருப்பார். ஆனால் அதற்கு யார் பணம் தருவது? தனித்து நின்று ஓட்டை பிரித்தால்தானே பணம் வரும். இப்போதுதான் புரிகிறது எங்கள் தலைவர் முன்போல் ஏன் படம் தயாரிப்பதில்லை. நடிப்பதில்லை என்று. அவருக்குத்தான் அரசியலிலேயே நல்ல வருமானம் வருகிறதே என்று புலம்புகிறார் கேப்டனின் தீவிர ரசிகர்!
ஒன்று மட்டும் நிச்சயம். விஜயகாந்த் எதாவது ஒரு கூட்டணியில் இணைந்தால் கட்சி தப்பிக்கும். அவர் தனித்து நின்றால் விஜயகாந்த் மட்டும் தப்பித்து விடுவார்.
No comments:
Post a Comment