சட்டையை மாற்றினால் ஆளே மாறிவிடுவார் என்று நினைப்பது போலதான் இருக்கிறது இது! ரஜினி நடித்த அனிமேஷன் படமான சுல்தான் தி வாரியர் பின்பு ஹராவானது. இப்போது ராணாவாகியிருக்கிறது. ஆனால் இந்த மாற்றத்தால் ரஜினிக்கு இன்னொரு கூடுதல் கேரக்டர் கிடைத்திருக்கிறது என்பது மட்டும்தான் புதுசு. மற்றதெல்லாம் அதே! அதேதான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
நேற்றைய கோடம்பாக்கத்தின் பரபரப்பு ரஜினி நடிக்கும் ராணா படத்தை பற்றிதான்! பத்திரிகையாளர்களுக்கு அவசரம் அவசரமாக அனுப்பப்பட்ட செய்தி குறிப்பில் ரஜினி மூன்று வேடத்தில் நடிக்கும் ராணா என்ற விஷயம் பிரதானமாக இடம் பெற்றிருந்தது. ஒரு புதுப்படம் போலவே இதை அறிவித்திருந்தார்கள். ரஜினி ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கக் கூடிய மந்திர வார்த்தைகள்தான் அவையெல்லாம் என்றாலும், நிஜம் என்னவாக இருக்கும் என்ற ஆவலும் தேடலும் அநேகமாக எல்லா பத்திரிகையாளர்களுக்கும் இருந்தது.
நாம் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் வேறு மாதிரியானவை. சுல்தான் தி வாரியர் படத்திற்கு சுமார் பத்து கோடி வரை பைனான்ஸ் செய்திருந்த ஆட்லேப்ஸ் நிறுவனம் தனது பணத்தை திரும்ப வாங்கிக் கொண்டதாம். மேலும் இரண்டு கோடிகள் வட்டியாக கொடுத்து பனிரெண்டு கோடியாக கடந்த வாரம்தான் செட்டில் செய்யப்பட்டது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இந்த நிலையில் ஈராஸ் நிறுவனத்தோடு ஒரு புது ஒப்பந்தம் போட்டார்களாம். இதுவரை எடுக்கப்பட்ட அனிமேஷன் பகுதிகளை ஒரு ரஜினியாக வைத்துக் கொண்டு படத்தில் மேலும் இரண்டு நிஜ ரஜினிகளை உள்ளே நுழைத்துவிடலாம். அதற்கேற்றார் போல ஸ்கீரின் பிளேவை சுவாரஸ்யமாக்கிக் கொள்ளலாம் என்று ஐடியா கொடுத்தாராம் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார்.
இந்த டிஸ்கஷன் நடந்து கொண்டிருக்கும்போது சில சமயங்களில் ரஜினியே கூட ரவிகுமார் ஆபிசுக்கு வந்திருக்கிறார். அவரும் டிஸ்கஷனில் கலந்து கொண்டிருக்கிறார். முள் மேல் விழுந்த சேலையாக பல கோடி ரூபாய்களை இந்த அனிமேஷன் படத்தில் கொட்டியிருந்தார் சவுந்தர்யா ரஜினி. இப்போது சேலையும் கிழியாமல் முள்ளும் உடையாமல் காப்பாற்ற போகிறார் கே.எஸ்.ரவிகுமார்.
அவர் போட்டிருக்கும் இந்த புதிய திட்டம் ரஜினி ரசிகர்களுக்கு நிஜமாகவே சர்க்கரை பொங்கலாக இருக்கும் என்பதுதான் அசர வைக்கும் உண்மை!
பின்குறிப்பு- இப்படத்தில் மற்ற இரண்டு ரஜினியுடன் ஜோடி சேர அனுஷ்காவிடமும், தீபிகா படுகோனிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
No comments:
Post a Comment