ஆஸ்கர் விருதுக்கு மீண்டும் பரிந்துரைக்கப்பட்ட அடுத்த நாளான நேற்று, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு உலக பொருளாதார அமைப்பு ‘கிரிஸ்டல் விருது’ வழங்கி கவுரவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பின் ஆண்டு கூட்டம் நேற்று தொடங்கியது. அதில் வர்த்தகம், அரசு, கலை, கலாசாரம், மதங்கள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 2,500 சர்வதேச தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
அதில் கலைத் துறையில் இசை மட்டுமின்றி தனது திறமையால் சமூக மற்றும் அறக்கட்டளை பணிகளுக்கும் சிறந்த பங்களிப்பதற்காக ஏ.ஆர். ரகுமானுக்கு ‘கிரிஸ்டல் விருது’ வழங்கப்பட்டது.
அழகிய எம்பிராய்டரி செய்த கறுப்பு குர்தா அணிந்து விழாவில் பங்கேற்ற ரகுமான், விருதை பெற்றுக் கொண்டார். ‘ஸ்லம்டாக் மில்லியனர்’, ‘பாம்பே ட்ரீம்ஸ்’ ஆகிய திரைப்படங்களில் ரகுமானின் சிறந்த இசை பற்றி கூட்டத்தில் பெருமையாக குறிப்பிட்ட பலரும் குழந்தைகள் நலனுக்கு அவர் பணியாற்றி வருவதை பாராட்டினர். இரண்டு ஆஸ்கர் விருதுகள் உட்பட பல சர்வதேச, தேசிய விருதுகளை பெற்றுள்ள ரகுமான், விருதுக்கு நன்றி தெரிவித்து பேசுகையில், “தனது சமூக பணிக்கு இந்த விருது மேலும் ஊக்கம் அளிக்கிறது” என்றார். ஆஸ்கர் விருதுக்கான பரிசீலனை பட்டியலில் மீண்டும் 2 பிரிவுகளில் ஏ.ஆர். ரகுமான் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment