தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து தே.மு.தி.க. 41 தொகுதிகளில போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றது. சட்டசபையில் 2-வது பெரிய கட்சியாக இருப்பதால் தே.மு.தி.க.வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது.
அந்த கட்சி 29,02,813 ஓட்டுகள் பெற்றுள்ளது. இது 7.88 சதவீதம் ஆகும். இதன்மூலம் தே.மு.தி.க.வுக்கு மாநில கட்சி அந்தஸ்தும் கிடைக்கிறது. விரைவில் இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிடுகிறது.
2005-ல் விஜயகாந்த் தே.மு.தி.க.வை தொடங்கினார். கட்சி தொடங்கிய 6 ஆண்டுகளில் தே.மு.தி.க. அரசியல் கட்சி அந்தஸ்து பெறுகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. 234 தொகுதியிலும் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.
விருத்தாசலம் தொகுதியில் இருந்து விஜயகாந்த் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது தே.மு.தி.க.வுக்கு அரசியல் கட்சி அங்கீகாரம் கிடைக்கவில்லை. தற்போது ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் வெற்றி பெற்று 2-வது முறையாக எம்.எல்.ஏ.வாகி இருக்கிறார்.
அவரது கட்சி சார்பில் 29 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை செல்கிறார்கள். தே.மு.தி.க.வுக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் கிடைப்பதன் மூலம் அந்த கட்சி பொதுவான சின்னத்தை தேர்வு செய்து கொள்ளலாம். தேர்தல் கமிஷன் நடத்தும் அனைத்து கட்சி கூட்டங்களில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்படும்.
வானொலி மற்றும் தொலைக்காட்சியில் தேர்தல் பிரசாரம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். இதேபோல் புதுவையில் முதல்- அமைச்சர் ரங்கசாமி தொடங்கிய என்.ஆர்.காங்கிரசுக்கும் அரசியல் கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது. கட்சி தொடங்கிய 3 மாதத்திலேயே என்.ஆர்.காங்கிரசுக்கு கட்சி அங்கீகாரம் கிடைக்கிறது.
புதுவை சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் அ.தி.மு.க.வுடன் சேர்ந்து 17 தொகுதிகளில் போட்டியிட்டு 15 இடங்களை கைப்பற்றியது. அந்த கட்சி 40 சதவீத ஓட்டுக்களை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment