ரஜினிக்கு மாற்று சிறுநீரக ஆபரேஷனுக்கான வாய்ப்புகள் குறைவு. அவரது சிறுநீரகங்கள் இயல்பான செயல்பாட்டுக்குத் திரும்பும் வாய்ப்புள்ளது, என அவருக்கு ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சையளித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.
ராமச்சந்திரா மருத்துவமனையில் ரஜினிகாந்தின் உடல்நிலையை டாக்டர்கள் முழுமையாக பரிசோதனை செய்ததில், அவருடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதன் காரணமாகவே அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதை டாக்டர்கள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தார்கள்.
ரஜினிகாந்துக்கு மேலும் சிகிச்சை அளிப்பதற்காக அவர் வெள்ளிக்கிழமை இரவு சிங்கப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இது குறித்து அவருக்கு சென்னையில் சிகிச்சை அளித்த டாக்டர்கள் கூறியதாவது:
“ரஜினிகாந்தின் சிறுநீரகத்தில், கிரியாட்டினின் அளவு கூடிக்கொண்டே இருக்கிறது. இதற்காக, ராமச்சந்திரா மருத்துவமனையின் சிறுநீரக துறை டாக்டர்கள் குழு, அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மற்றும் சிறுநீரக கோளாறு தொடர்பான உயர் சிகிச்சை அளித்தார்கள்.
ஆபரேஷன் தேவையில்லை
அதன்பிறகு, சிறுநீரக கோளாறில் இருந்து அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது அவருடைய சிறுநீரகம் 50 சதவீதம் இயங்கி வருகிறது. இப்போது அவருக்கு மாற்று சிறுநீரக ஆபரேஷன் அவசியத்துக்கான வாய்ப்புகள் குறைவு. தொடர்ந்து அவருக்கு, டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரஜினிகாந்த், ஒரு தனிமை விரும்பி. அவர் ஓய்வு கலந்த மருத்துவ சிகிச்சை வேண்டும் என்று விரும்புகிறார். இதற்காகவே சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்தனர்.
மருத்துவர் குழு பயணம்
அதன்படி, சிங்கப்பூர் செல்லும் ரஜினிகாந்துடன் சிறுநீரக சிகிச்சை நிபுணர் டாக்டர் பி.சௌந்தரராஜன் தலைமையில் மருத்துவ குழுவினரும், இருதய சிகிச்சை நிபுணரும் உடன் சென்றுள்ளனர்.
அவர்கள், சென்னையில் ரஜினிகாந்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் மற்றும் தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் பற்றி சிங்கப்பூர் டாக்டர்களிடம் தங்கள் ஆலோசனைகளை தெரிவிப்பார்கள்," என்றனர்.
No comments:
Post a Comment