பகலில் கொலை செய்து விட்டு இரவில் உடலை ஆளரவமற்ற பகுதியில் தீவைத்து எரித்து விட்டுத் தப்பிச் செல்லும் கும்பல் குறித்த திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது.
சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த மாசிலாமணி என்ற ஓய்வு பெற்ற அரசு அதிகாரி தனது காரில் தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் அவருடைய டிரைவரான சுரேஷ் என்பவர் மீது சந்தேகம் வலுத்தது.
தற்போது போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மிகப் பெரிய கொலைக் கும்பல் இந்தக் கொலையின் பின்னணியில் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படும் தகவல்கள்...
இந்தக் கொலையில் ஈடுபட்டவர்கள் ஒரு கொடூரக் கொலைக் கும்பலைச் சேர்ந்தவர்கள். கார் டிரைவர் சுரேஷும் இந்தக் கும்பலைச் சேர்ந்தவன்தான். மேலும் அவனது உண்மையான பெயர் சுரேஷ் கிடையாது. சிவா என்பதுதான் அவனது உண்மையான பெயர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பேயன்விளை என்ற கிராமத்தைச் சேர்ந்தவன். ஊரில் சரியாக வேலை பார்க்காமல் சுற்றி வந்த அவன் பெற்றோரின் கோபத்தை சம்பாதித்தான். இதனால் சென்னைக்கு வந்துள்ளான். வரும்போது நான் பெரிய கோடீஸ்வரானாகத்தான் இந்த ஊருக்குத் திரும்பி வருவேன் என்று சினிமா ஹீரோக்கள் பாணியில் சவாலும் விட்டுள்ளான்.
சென்னைக்கு வந்த சிவா ஒரு மிகப் பெரிய கொலைக் கும்பலில் இணைந்துள்ளான். இந்தக் கும்பலின் வேலையே கொடூரமாக கொலைசெய்து உடலை தீவைத்து எரித்து விடுவதுதான்.
பெரும் பணக்காரர்கள் வீடுகளை இவர்கள் குறி வைப்பார்கள். பின்னர் அந்த வீட்டில் யாராவது ஒருவர் டிரைவராக போய் சேருவார். பின்னர் அந்த வீட்டினருடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட பின்னர் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, பிறகு பணம், நகைகளைக் கொள்ளையடித்து விடுவார்கள்.
இதற்கு இடையூறாக யார் வந்தாலும் அவர்களைக் கொன்று விடுவார்கள். பின்னர் உடலை இரவில் எங்காவது ஆளரவமற்ற இடத்தில் வைத்து தீவைத்து எரித்துச் சாம்பலாக்கி விடுவார்கள்.
இந்,த கொலைகார, கொள்ளைக்காரக் கும்பல் தமிழகம் முழுவதும் இப்படி பலரைக் கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். சிவா சிக்கினால்தான் உண்மை தெரிய வரும்.
மாசிலாமணியிடமும் சிவா, சுரேஷ் என்ற பெயரில் சேர்ந்து அவரிடம் பெரும் பணம் புழங்குவதை அறிந்து தனது கூட்டாளிகள் நான்கு பேருடன் இணைந்து கொலை செய்துள்ளான். ஆனால் சம்பவத்தன்று மாசிலாமணியிடம் பெருமளவில் பணம் இல்லாததால், அவர் வைத்திருந்த பணத்தையும், நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
தற்போது இந்தக் கும்பலை போலீஸார் சுற்றி வளைத்துள்ளதாக தெரிகிறது. விரைவில் இவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் குறித்த விவரம் வெளியிடப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொலை வழக்கில் மிகப் பெரும் அதிர்ச்சித் தகவல்கள் காத்திருப்பதாகவும் போலீஸ் தரப்பில் பரபரப்பாக பேசப்படுகிறது.
No comments:
Post a Comment