தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி... சினிமாதான் என்னை வாழ வைக்கிறது என்று அவ்வப்போது சினிமா விழாக்களில் பங்கேற்று பேசும்போது குறிப்பிடுவார். புதுச்சேரி முன்னாள் முதல்வரோ... கருணாநிதிக்கு நேர் மாறாக சினிமா சூட்டிங்கால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கண்டனக் குரல் எழுப்பியிருக்கிறார். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் சூட்டிங் நடத்த யார்தான் அனுமதி வழங்குகிறார்களோ என்று அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி நகரில் நடக்கும் சினிமா படப்பிடிப்புகளால் பொதுமக்களுக்கு பெருந்தொல்லை ஏற்படுகிறது. படப்பிடிப்புகளுக்கு யார் அனுமதி வழங்குகிறார்கள் என்று தெரியவில்லை. அங்கு நிற்கும் போலீசாருக்கும் தெரிவதில்லை. மேலதிகாரி உத்தரவின்பேரில் அவர்கள் நிற்கிறார்கள். புதுச்சேரியில் முக்கிய பொழுதுபோக்கு இடம் கடற்கரை சாலை. அங்கு இரவு 7மணிக்கு சூட்டிங் நடக்கிறது. நூற்றுக்கணக்கில் போலீசார் நிற்கிறார்கள். மக்கள் நடைப்பயிற்சி செய்ய வழியில்லை. கோர்ட்டுக்கு எதிர்ப்புறம் சாலையை மறைத்து படப்பிடிப்பு நடக்கிறது. இதனால் புதிய நடைபாதையும், சாலையும் பாழாகிறது.
புதுச்சேரியில் இயற்கை காட்சிகள் எடுக்க வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நடைமுறையில் எந்த கெடுபிடியும் இல்லாமல் இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் படப்பிடிப்பு நடத்தலாம் என்பதால் வருகிறார்கள். இதற்கு உத்தரவு தரும் அதிகாரிகள் சரியான பிரதிநிதியை படப்பிடிப்பு இடத்தில் இருக்க செய்யவேண்டும். நிபந்தனைகளின்படி படப்பிடிப்பு நடக்கவேண்டும். இனியாவது பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment