அமைச்சர் மரியம்பிச்சை விபத்தில் மரணம் அடைந்த சில மணி நேரங்களிலேயே இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரிகள் முதல் தனிப்படையில் இடம் பெற்றிருந்த கடைநிலை போலீஸ்காரர்கள் வரை இரவு-பகல் பாராமல் இந்த வழக்கில் துப்புதுலக்கி லாரியை கண்டுபிடித்துள்ளனர்.
துப்பு துலக்கியது எப்படி என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
விபத்து நடைபெற்ற அன்று மாலையே திருச்சி சென்ற நாங்கள் விபத்து நடைபெற்ற வழியாக சென்ற வாகனங்களை முதலில் கணக்கெடுத்தோம். தூத்துக்குடியில் இருந்து திருச்சி மாவட்டத்துக்கு வரும் வாகனங்கள், சமயபுரம் சோதனைசாவடி, திருமாந்துறை சோதனை சாவடிகளை தாண்டித்தான் கட்டாயம் செல்லவேண்டும்.
இந்த 2 சோதனை சாவடிகளுக்கும் இடையில்தான் விபத்து நடைபெற்றுள்ளது. எனவே சமயபுரம் சோதனை சாவடியில் உள்ள கேமராவை போட்டுப்பார்த்து விசாரித்தோம். விபத்து நடைபெற்ற நேரத்தை கணக்கில் வைத்துக் கொண்டு அதற்கு முன்பாக எத்தனை வாகனங்கள் சென்றுள்ளன என்று கணக்கெடுத்தபோது 3,485 நான்கு சக்கர வாகனங்கள் அந்த சாலையை கடந்த சென்றிருப்பது தெரிய வந்தது.
அதில் 800 லாரிகள். இவற்றில் 127 வாகனங்கள் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவை. கேரளாவைச் சேர்ந்தது 4 வாகனங்கள். ஆந்திராவைச் சேர்ந்த 8 லாரிகளும் சாலையை கடந்து சென்றிருந்தன.
சமயபுரம் சோதனை சாவடியில் இருந்து 25 கி.மீ. தூரத்துக்குள்தான் அமைச்சரின் கார் விபத்தில் சிக்கியது. எனவே சமயபுரம் சோதனை சாவடியில் இருந்து விபத்து நடைபெற்ற இடத்தை தாண்டி சென்ற வாகனங்கள் அனைத்தும் சரியாக எந்த நேரத்தில் சோதனை சாவடியை கடந்துள்ளன என்பதை முதலில் கண்டுபிடித்தோம்.
இதில் ஆந்திர மாநில லாரிகள் அடுத்தடுத்து சென்றது தெரிய வந்தது. இந்த லாரியின் எண்களை வைத்து முகவரியை கண்டுபிடித்தோம். அப்போதுதான் ரகமத்துல்லா பிடிபட்டார். போலீசில் சிக்கியதுமே அவர் உண்மையை ஒப்புக்கொண்டு விட்டார்.
அவர் மீது விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது, தடயத்தை அழிக்க முயன்றது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment