நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட மகன் விஜய் ஸ்ரீ ஹரி விஷயத்தில் இன்னும் தீர்வு கிடைக்காததால், சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று உண்ணாவிரதமிருக்க முயற்சி செய்தார் நடிகை வனிதா.
நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் நடிகை வனிதா. வனிதாவுக்கும், அவரது முதல் கணவர் ஆகாஷுக்கும் பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரி. அவனை தன்னிடம் ஒப்படைக்க கோரி வனிதா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் அந்த சிறுவன் தாயிடம் வர மறுக்கிறான். அவனுக்கு வனிதாவின் முன்னாள் கணவர் ஆகாஷ் மூளைச் சலவை செய்துள்ளதாக குற்றம்சாட்டி வனிதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உளவியல் நிபுணர்களிடம் ஆலோசித்தபிறகு, வனிதாவிடம் குழந்தையை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என வனிதா குற்றம்சாட்டியுள்ளார். எனவே சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து வனிதா புதிய புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் நீதிமன்ற உத்தரவின் பேரில் மகன் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி மத்திய சென்னை இணை கமிஷனர் சங்கர் ஆலோசனையின் பேரில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் ஜெயகர்சாலி நேற்று மாலை வனிதாவிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் விருகம்பாக்கத்தில் உள்ள ஆகாஷின் வீட்டுக்கு பெண் போலீசார் வனிதாவுடன் சென்றனர். அங்கிருந்த விஜய் ஸ்ரீஹரி, வனிதாவுடன் செல்ல மறுத்து விட்டான். இதனால் போலீசார் அங்கிருந்து சென்று விட்டனர்.
வனிதாவும் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று இரவு 11.30 மணி அளவில் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு வனிதா திடீரென வந்தார். எனது மகனை மீட்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று கூறிய அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார். உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறினார்.
இதையடுத்து போலீசார் மீண்டும் ஆகாஷின் வீட்டுக்கு வனிதாவை அழைத்துச் சென்றனர். அப்போதும் விஜய் ஸ்ரீஹரி அவருடன் செல்ல மறுத்து விட்டான். இதுதொடர்பாக வனிதா கூறுகையில், "வாரத்தில் 3 நாட்கள் (வெள்ளி, சனி, திங்கள்) விஜய் ஸ்ரீஹரி என்னுடன் இருக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகனை என்னிடம் ஒப்படைக்கும் வரை நான் ஓயமாட்டேன். ஆகாசிடமிருந்து அவனை மீட்காமல் விடமாட்டேன். நிச்சயம் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்", என்றார் அவர்.
No comments:
Post a Comment