கவிப்பேரரசு வைரமுத்து ஒரு படத்தை பாராட்டினார் என்றால் அந்த படத்தில் ஏதோ விஷயம் இருக்கிறது என்பது உறுதி. அத்துடன் படத்தில் பாடல்கள் எழுதுவது, படத்தைப் பற்றி பாராட்டி பேசுவது மட்டும் நில்லாமல், அந்த படத்தின் செய்தி மக்களிடையே சென்றடைய வேண்டும் என்று வைரமுத்து நினைத்தால், அந்தப் படம் கண்டிப்பாக வெற்றிப் பெறக்கூடிய படம் என்பதும் உறுதி.
அப்படி வைரமுத்துவால் தூக்கி நிறுத்தப்பட்ட படம்தான் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும், தேசிய விருதையும் பெற்ற 'தென்மேற்குப் பருவக்காற்று'. இந்த படத்தை தொடர்ந்து வைரமுத்து தூக்கி நிறுத்தும் மற்றொரு படம் 'சேவற்கொடி'.
புதுமுக இயக்குநர் இரா.சுப்பிரமணியன் இயக்கியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீடு இன்று (மே 27) சென்னையில் நடைபெற்றது. ஏவிஎம் சரவணன் முதல் குறுந்தகடை வெளியிட, குமுதம் நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் ஜவகர் பழனியப்பன் பெற்றுகொண்டார். இந்த நிகழ்ச்சியில் வசந்த பவன் ஹோட்டல்களின் உரிமையாளர் ரவி, இயக்குநர்கள் கே.வி.ஆனந்த், ஏ.ஆர்.முருகதாஸ், சீனு ராமசாமி, ராதாமோகன் ஆகியோர் கலந்துகொணடார்கள்.
புதுமுக இசையமைப்பாளர் சத்யா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் மேடையில் நேரடியாக பாடினார்கள். பாடல்கள்களின் வரிகளும், இசையும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அத்தனை பேரையுமே கவர்ந்தது. நிகழ்ச்சியில் பேசிய அத்தனை பேரும் வைரமுத்துவின் பாடல்களின் வரிகளைப் பற்றி பாராட்டி பேச, இயக்குநர் சீனு ராமசாமி, வைரமுத்து புதிய இயக்குநர்களுக்கு எந்த வகையில் ஒத்துழைப்பு கொடுப்பார் என்பதையும், அவருடன் பணியாற்றிய தனது அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, "புதியவர்களை என்றுமே நான் எந்த புத்தில் எந்த பாம்பு இருக்குமோ என்று பார்ப்பதில்லை. எந்த விதையில் எந்த விரிச்சம் இருக்குமோ என்றுதான் பார்ப்பேன். அந்த வகையில் இயக்குநர் சுப்பிரமணியனும் இந்த படத்தின் மூலம் வெற்றி பெறுவார். தமிழ் சினிமா இந்த காலகட்டத்தில் புத்துணர்ச்சியாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
அந்த அளவுக்கு மேலை நாட்டு திரைப்படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு இங்கு திறைமைசாலிகள் இருக்கிறார்கள். அதுபோல தயாரிப்பாளர்களுக்கு நான் ஒன்று சொல்லிகொள்கிறேன். நீங்கள் புதிய இயக்குநர்களை தேர்ந்தெடுக்கும் போது நன்றாக யோசியுங்கள். அவர்களை தேர்ந்தெடுத்தப் பிறகு யோசிக்காதிர்கள். அவர்களுக்கு சுதந்திரம் கொடுங்கள். அப்போதுதான் சாதித்து காட்டுவார்கள். சேவற்கொடி இயக்குநர் சுப்பிரமணியன் ஒரு எழுத்தாளர். எழுத்தாளர்கள் இயக்கும் படம் என்றுமே தோல்வி பெறாது. அந்த வகையில் சேவற்கொடியும் வெற்றி பெறும்." என்றார்.
No comments:
Post a Comment