மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த காந்திய வாதியான அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று பெங்களூரில் ஊழலுக்கு எதிரான அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் அன்னா ஹசாரே கலந்து கொண் டார். அப்போது அவர் பேசியதாவது:-
பிரதமர் மன்மோகன்சிங் நல்ல மனிதர். ஆனால் சோனியாகாந்தி ரிமோட் கன்ட்ரோல் போல் இருந்து கொண்டு அவரை இயக்கி வருகிறார். சோனியாகாந்தி தான் பிரச்சினைகளை உருவாக்கி வருகிறார். பிரதமர் மன்மோகன்சிங் கெட்ட மனிதர் அல்ல. ஆனால் பிரச்சினைகளை உருவாவதற்கு ரிமோட் கன்ட்ரோல் தான் காரணம்.
எந்த அரசாக இருந்தாலும் மக்கள் சக்தி தான் பலம் வாய்ந்தது என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. ஊழல்வாதிகளை விசாரிக்கும் லோக்பால் சட்ட மசோதாவை வருகிற ஆகஸ்ட் மாதம் 16-ந் தேதிக்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
இல்லையெனில் புதுடெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மீண்டும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவேன். இதற்கான கர்நாடக மக்கள் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஊழலுக்கு எதிராக நான் பிரசாரம் செய்து வருவதால் இதுவரை 6 மந்திரிகள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த 6 பேரும் என்னை பழிவாங்க துடிக்கிறார்கள். ஆனால் கறைபடியாதவன் என்பதால் அவர்களால் என்னை நெருங்க முடியவில்லை.
இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.
No comments:
Post a Comment