தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. இதுவரை எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்காத அமைச்சர் என்.ஆர்.சிவபதி, திருச்சி மனோகரன் ஆகியோர் தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசன் முன்னிலையில் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதையடுத்து 14-வது சட்டசபையின் சபாநாயகராக ஜெயக்குமார் ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாக அவர் அறிவித்தார். இதையடுத்து அவை முன்னவர் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர் கட்சி தலைவர் விஜயகாந்த் ஆகியோர் ஜெயக்குமாரை 9.36 மணி அளவில் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சபாநாயகராக பதவி ஏற்ற ஜெயக்குமார் வாய்ப்பு வழங்கிய முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கும், ஆதரவளித்த உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் துணை சபாநாயகர் தேர்தல் நடந்தது. துணை சபாநாயகராக தனபால் ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்படுவதாக சபாநாயகர் ஜெயக்குமார் அறிவித்தார். பின்னர் சபாநாயகர், துணை சபாநாயகரை பாராட்டி முதல்- அமைச்சர் ஜெயலலிதா மற்றும் உறுப்பினர்கள் பேசினார்கள்.
அதன் விவரம் வருமாறு:-
ஓ.பன்னீர்செல்வம் (அவை முன்னவர்):- தமிழக மக்களின் பேராதரவை பெற்று 3-வது முறையாக முதல்- அமைச்சர் அம்மா பொறுப்பு ஏற்று உள்ளார். வரலாற்று பெருமை மிக்க இந்த சபையின் தலைவராக தாங்களும், துணை சபாநாயகராக தனபாலும் அவையில் பதவி ஏற்கும் வாய்ப்பை அம்மா வழங்கி உள்ளார்.
பாராளுமன்ற சட்டமன்ற மரபை மதிக்கும் வகையில் இந்த மாமன்றத்தில் தலைவராகும் தகுதி உங்களுக்கு உள்ளது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு இல்லாமல் அணைவரையும் சமமாக நடத்தும் பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் நீங்கள் பணியாற்றி இந்த அவைக்கு பெருமை சேர்க்க வேண்டும். அதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
விஜயகாந்த் (எதிர்கட்சி தலைவர்):- எந்தவித போட்டியும் இல்லாமல் ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டதில் இருந்தே சபாநாயகர் பதவிக்கு தாங்கள் பொருத்தமானவர் என்பது தெளிவாகிவிட்டது. சபாநாயகர் பட்டப்படிப்பும், சட்டமும் படித்தவர். ஆளும் கட்சியில் அமைச்சராகவும், எதிர்க்கட்சி வரிசையிலும் பணியாற்றி உள்ளார்.
எனவே ஆளும் கட்சியான அ.தி.மு.க. எதிர்க்கட்சியான எங்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர். தங்களுக்கு தே.மு.தி.க. முழு ஒத்துழைப்பை வழங்கும். மக்களுடைய மிகப்பெரிய ஆதரவுடன் 3-வது முறையாக முதல்- அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சி தலைவிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள சபாநாயகர், துணை சபாநாயகருக்கும் எனது வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மு.க.ஸ்டாலின் (தி.மு.க.):- 14-வது சட்டசபையின் தலைவராக ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்ட சபாநாயகருக்கும், துணை சபாநாயகருக்கும் எனது வாழ்த்தையும், வரவேற்பையும் தி.மு.க. சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஆளும் கட்சி வரிசையிலும், எதிர்க்கட்சி வரிசையிலும் இருந்து இருக்கிறீர்கள். சட்டம் படித்து இருக்கிறீர்கள். எனவே ஆளும் கட்சியின் நோக்கத்தையும் எதிர்க்கட்சியின் உணர்வுகளையும் மதித்து கடமையாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.
5 விரல்கள் இருந்தாலும் அவைகள் ஒன்று சேர்ந்தால்தான் பயன்கிடைக்கும் என்று பேரறிஞர் அண்ணா சொல்லி இருக்கிறார். பெரிய தேராக இருந்தாலும் அதற்கு சிறிய அச்சாணி முக்கியம். எனவே எண்ணிக்கை சிறிது என்று எடுத்துக் கொள்ளாமல் அனைத்து கட்சிகளையும் மதித்து வழி நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
இந்த பாரம்பரியம் கொண்ட இந்த அவையில் எத்தனையோ சபாநாயகர்கள் இருந்து இருக்கிறார்கள். என்றாலும் கிருஷ்ணாராவ், புலவர் கோவிந்தன், சி.பா.ஆதித்தனார், பழனிவேல் ராஜன் ஆகியோர் வரலாறு படைத்தனர். அதுபோல் நீங்களும் சிறப்பாக இடம்பெற வேண்டும். ஜனநாயக தேரை ஒன்று கூடி இழுக்க எங்களது ஒத்துழைப்பு இருக்கும். அவை சிறப்பாக நடக்க ஒத்துழைப்பு அளிப்போம்.
சபாநாயகருக்கும், துணை சபாநாயகருக்கும் எனது வாழ்த்தை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சவுந்திரராஜன் (மார்க்சிஸ்டு கம்யூ), ஆறுமுகம் (இந்திய கம்யூ) கோபிநாத் (காங்) குரு (பா.ம.க.) பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி) கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) கதிரவன் (பார்வர்டு பிளாக்) மற்றும் சட்டசபை கட்சி தலைவர்கள் சபாநாயகரை வாழ்த்தி பேசினார்கள்.
இறுதியில் சபாநாயகர் ஏற்புரை வழங்கி பேசினார்.
அவர் கூறியதாவது:- சான்றோர்கள் அமர்ந்த பெருமைமிக்க இந்த சபையில் என்னை சபாநாயகராக இருக்கும் வாய்ப்பை புரட்சி தலைவி அம்மா வழங்கியிருக்கிறார். நான் இந்த பொறுப்பை ஏற்பதற்கு முன்பே கட்சி பாகுபாடு இல்லாமல் ஒருநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுரை வழங்கி உள்ளார்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றுடன் பெருமை சேர்க்கும் வகையில் சபையை நடத்துவேன். இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். மக்களுக்காக ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சியினர் கருத்துக்களை பாகுபாடு இல்லாமல் எடுத்துரைத்து எல்லோ ருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
கட்சி உறுப்பினர்கள் எண்ணிக் கையை கருத்தில் கொள் ளாமல் வாய்ப்பு வழங்கப்படும். புரட்சி தலைவியின் கீழ் நடைபெறும் இந்த ஆட்சியில் ஜனநாயக மரபுகள் காக்கப்படும். விவாதத்தில் பங்குபெற சமமான வாய்ப்பு கள் வழங்கப்படும். புனித ஜார்ஜ் கோட்டையில் மீண்டும் ஒரு மகத்தான ஆட்சி மலர்ந்து உள்ளது. அதன் பெருமையை காக்கும் வகையில் நடுநிலையோடு செயல்படுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment