சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் நடிகர் ரஜினிகாந்துக்கு அளிக்கப்பட்டு வரும் டயாலிசிஸ் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் பேரக்குழந்தைகளுடன் நேற்று கொஞ்சி மகிழ்ந்தார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 29-ந் தேதி, `ராணா' படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது, அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதற்காக, சென்னை மைலாப்பூரில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, அன்று மாலையே அவர் வீடு திரும்பினார். அதன் பிறகு, கடந்த 4-ந் தேதி அவர் மீண்டும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 6 நாட்கள் சிகிச்சை பெற்றபின், அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில், கடந்த 13-ந் தேதி அவர் திடீரென்று, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய மூச்சு குழாயில் தொற்றுநோய், நுழையீரலில் நீர்க்கோர்ப்பு, சிறுநீரக பாதிப்பு இருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தார்கள்.
ரஜினிகாந்துக்கு ஏற்பட்ட சிறுநீரக பாதிப்புக்காக நவீன சிகிச்சை தேவைப்பட்டதால், அவர் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த 27-ந் தேதி இரவு, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து, ஆம்புலன்ஸ் வேன் மூலம் விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டார். இரவு 11.45 மணி விமானம் மூலம் அவர் சிங்கப்பூர் பயணமானார். அவருடன் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகன்கள் தனுஷ், அஸ்வின், ராமச்சந்திரா மருத்துவமனையின் சிறுநீரக பிரிவு நிபுணர் டாக்டர் பி.சவுந்தரராஜன், இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் டி.ஆர்.முரளிதரன் ஆகியோர் உடன் சென்றார்கள்.
ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், சில காரணங்களால் அவர்களுடன் செல்ல முடியவில்லை. நேற்று முன்தினம் இரவு அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூருக்கு சென்றார். சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்ட ரஜினிகாந்த், அங்குள்ள மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள டாக்டர்கள் குழுவினர் ரஜினிகாந்துக்கு, டயாலிசிஸ் சிகிச்சை அளித்தனர். இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து,
நேற்று காலை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு ரஜினிகாந்த் மாற்றப்பட்டார். டாக்டர்கள் மற்றும் குடும்பத்தினர்களிடம் ரஜினிகாந்த் உற்சாகமாக பேசினார். பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார். அவருடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டி ரஜினி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். திருச்சி ஸ்ரீரங்கம் நகர தலைமை மற்றும் அனைத்து கிளை ரஜினி மன்றங்களை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நேற்று மூலவர் ரெங்கநாதருக்கு சிறப்பு பூஜை நடத்தினர். ஸ்ரீரெங்க விலாச மண்டபம் அருகில் 100-க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் தரையில் அமர்ந்து வெறும் தரையில் மண்சோறு சாப்பிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.
ரெங்கா, ரெங்கா கோபுரம் அருகில் மடிப்பிச்சை எடுத்தனர். பின்னர் மாலையில் திருவானைக்காவல் ஜம்புகேசுவரர்-அகிலாண்டேசுவரி கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர். ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டி திருவொற்றியூர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற பொறுப்பாளர் ரஜினி வெங்கடேசன் தலைமையில் ரஜினி ரசிகர்கள் திருவொற்றியூர் டோல்கேட் தண்டுமாரியம்மன் கோவில், டி.எஸ்.ஆர்.நகர் கிறிஸ்தவ தேவாலயம், தாங்கல் தர்கா போன்ற இடத்தில் மும்மத பிரார்த்தனை நடத்தினார்கள். நிகழ்ச்சியில் வி.ஜி. அருணாசலம், ரஜினிமுரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment