தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கொலை செய்ய விடுதலைப் புலிகள் திட்டமிட்டார்கள் என்ற கே.பியின் குற்றச்சாட்டு அபாண்டமானது என்றும், இந்தியாவில் தங்களுக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சி என்றும் விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.
புலிகளின் தலைமைச் செயலகத்தின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ஆ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
2009 மே மாதம் 18ம் நாளிலிருந்து எமது ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தை நாம் ஜனநாயக வழியில் முன்னெடுத்து வருகிறோம்.
எமது சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச தியாகங்களை எமது போராளிகள் செய்திருக்கிறார்கள். காலத்துக்குக் காலம் எமது அமைப்பின் போராட்ட முறைகளை மாற்றியமைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருக்கிறோம்.
கரந்தடிப் படை நடவடிக்கையில் தொடங்கி எதிரியால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் படை நடவடிக்கைகள் பலவற்றை எதிர்த்தும், எதிரியின் படைத்தளங்களைத் தகர்த்தும், எமது நிலப்பகுதிகளை மீட்டெடுத்து, ஒரு நாட்டுக்குரிய முழுமையான நிர்வாக மற்றும் படைக் கட்டமைப்புக்களை நிலைநிறுத்தி, தனிச்சுதந்திர தேசத்துக்கான கட்டுமானங்களை உருவாக்கி மக்களின் சுதந்திர வாழ்வுக்கு உறுதிப்படுத்தப்பட்ட அரசொன்றை நடத்தி வந்தோம்.
எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலகம் புரிந்துகொள்ளாமல் எம்மைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்ததாலும், ராஜதந்திர சூழ்ச்சிகளாலும், பெரும்பலத்தோடு நடத்தப்பட்ட பன்னாட்டுப் போர் நெறிகளை மீறிய கொடூர போரினாலும் நாம் ஆயுதப் போராட்டத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளோம்.
எனினும், எமது மக்களின் தேசிய ஒருமைப்பாட்டுணர்வையும், தமிழீழ விடுதலை மீது கொண்ட அசைக்க முடியாத பற்றுதலையும், எமது மாவீரர்களின் தியாகத்தின் வழிகாட்டுதலையும் துணையாகக் கொண்டு நாம் எமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை உணர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
ஐ.நா நிபுணர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், வேறு பல நடுநிலையாளர்கள் வெளிப்படுத்திய ஆவணங்களிலும் சிங்கள அரசு தமிழர் மீது மேற்கொண்ட இனப் படுகொலை தொடர்பான உண்மைகள் மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் ராஜபக்சே அரசு செய்வதறியாது திணறிக் கொண்டிருக்கிறது.
இதேவேளை, தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் சிங்கள தேசத்தைக் கிலி கொள்ள வைத்துள்ளது. ஈழத் தமிழர் மேல் மேற்கொள்ளப்பட்ட இனப் படுகொலை தொடர்பான எதிர்ப்புணர்வும், ஈழத் தமிழரின் அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்கான ஆதரவும் தமிழகத்தில் பெருகிவரும் நிலையில் செல்வி ஜெயலலிதா அவர்கள் தமிழக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தனக்குப் பாதகமாவே நோக்குகிறது சிங்களப் பேரினவாத அரசு.
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையும் தமிழகத் தேர்தல் முடிவும் ராஜபக்சே அரசுக்கு மிகப்பெரும் ஆபத்தாகவே முடியுமென்று உணர்ந்து கொண்ட சிங்கள அரசியல் ஆலோசகர்களின் மதிநுட்பமான சதித் திட்டமிடலில் முன்னிறுத்தப்படுவரே கே.பி என்ற செல்வராசா பத்மநாதன் என்ற குமரன் பத்மநாபன்.
இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கெதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சக நோக்கோடு கே.பி ஊடாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டு வருகிறது சிறிலங்கா அரசு.
சிறிலங்கா அரச படைகளின் பிடியிலுள்ள எவருமே விடுதலைப் புலிகள் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திச் செயற்பட முடியாது. இதுவரை காலமும் அவ்வாறு நடந்ததில்லை; இனியும் நடக்கப் போவதுமில்லை.
அவ்வகையில் பத்மநாதனும் தன்னை விடுதலைப் புலிகளின் உறுப்பினராக அடையாளப்படுத்துவதும், தான்தான் எஞ்சியிருக்கும் மூத்த போராளியென்று சொல்லிக் கொள்வதும், எமது அமைப்பின் சார்பில் பேசுவதும் தவறானது. அவர் எதிரியின் பிடிக்குட் சிக்கிய நாளிலிருந்து அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் கருத்துச் சொல்லும் தகுதியை இழந்துள்ளார்.
அதன் பின்னரான அவரது செயற்பாடுகள், கருத்துக்கள் எவையுமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறோம். எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நாசகாரத் திட்டங்களுக்கு கே.பி அவர்கள் துணை போகிறார் என்பதையே அவரின் நடவடிக்கைகள் வெளிக்காட்டுகின்றன.
பத்மநாதன் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தற்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களைக் கொலை செய்வதற்கு விடுதலைப் புலிகள் திட்டமிட்டார்கள் என்ற அவதூறை வெளிப்படுத்தியிருக்கிறார். இது அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டு. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சியோடே இந்தப் பேட்டி வடிவமைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தமிழ்நாட்டு உறவுகளும் அரசியல் தலைவர்களும் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறோம்.
அன்பான தமிழ்பேசும் உறவுகளே,சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் ராஜதந்திர சதிவலைக்குள் புதைந்து போகாமலும் கே.பி போன்றோரை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் வஞ்சகச் சூழ்ச்சிக்குத் துணை போகாமலும் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நார்வே-நெடியவன் ஜாமீனில் விடுதலை:
இந் நிலையில் நார்வே நாட்டில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதியான நெடியவன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டியது தொடர்பான புகாரின் பேரில் அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், போலீஸாரின் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், ஜூன் 1ம் தேதி அவர் மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment