போர் நடைபெற்ற ஈழத்திற்கு வருகை தந்து அங்கு பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்திக்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை விவகாரத்தில் தற்போது ஜெயலலிதா தீவிர கவனம் செலுத்தி வருவதால் அந்த நாடு மட்டுமல்லாமல், இந்திய அரசும் கூட தர்மசங்கடத்திற்குள்ளாகியுள்ளது.
இதையடுத்து ஜெயலலிதாவை தங்களது வழிக்கு கொண்டு வரும் வேலையில் இரு தரப்பும் இறங்கியுள்ளதாக தெரிகிறது.
அதன் ஒரு பகுதிதான், கேபியின் அந்த திடீர் பேட்டி. ஜெயலலிதாவைக் கொல்ல விடுதலைப் புலிகள் திட்டமிட்டதாக, இத்தனை காலமாக இதுகுறித்துப் பேசாத கேபி கூறியிருந்தார்.
ஜெயலலிதாவைக் குழப்பி, ஈழத் தமிழர் பிரச்சினையிலிருந்து அவரை பின்வாங்கச் செய்யும் இலங்கையின் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக இலங்கையில் போர் நடந்த பகுதியான வடக்கு மாகாணத்திற்கு ஜெயலலிதாவை அழைக்க இலங்கை அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இலங்கைக்கு ஜெயலலிதாவை வரவழைத்து, தமிழ் மக்களுடன் உரையாட வைத்து, தமிழர்கள் நலமாக இருக்கிறார்கள் என்பதைப் போல ஜெயலலிதாவுக்கு காட்டி, அதன் மூலம் ஜெயலலிதாவின் வேகத்தைக் குறைக்க இலங்கை அரசு நினைப்பதாக தெரிகிறது.
மேலும், ஜெயலலிதா மூலமாகவே, தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்களின் குரல்களை ஒடுக்கவும் ராஜபக்சே அரசு குள்ளநரித்தணமாக யோசித்து வருவதாக தெரிகிறது.
வடக்கில் யுத்தம் நிலவிய பிரதேசங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களைக் கேட்டறியவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சந்தர்ப்பம் அளிக்க இலங்கை அரசு உத்தேசித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்க ஜெயலலிதாவின் ஒப்புதலையும் பெற்று, ஜெயலலிதாவின் இலங்கை எதிர்ப்புணர்வை அப்படியே மழுங்கடிக்கச் செய்து விடும் சதித் திட்டத்திலும் இலங்கை இருப்பதாக தெரிகிறது.
ஜெயலலிதாவை சந்திக்க ரணில் விக்கிரமசிங்கே வரவிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம்,
No comments:
Post a Comment