திமுக எம்பியும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி சிறையில் உள்ள நிலையில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நேற்று முன் தினம் இந்தச் சந்திப்பு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாதும் உடனிருந்தார்.
கனிமொழியை திகார் சிறையில் கருணாநிதி கடந்த திங்கள்கிழமை சந்தித்தார். ஆனால், சோனியாவையோ பிரதமரையோ அவர் சந்திக்கவில்லை. மாறாக கருணாநிதியை மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், பரூக் அப்துல்லா, நாராயணசாமி, காங்கிரஸ் எம்பி ஜெயந்தி நடராஜன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
இந் நிலையில் வரும் ஜூன் மாதத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 3வது குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த சிலருக்கு மேலும் சிக்கல்கள் ஏற்படலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையே காங்கிரஸ் கூட்டணியில் இடம் பிடிக்க அதிமுக பல மறைமுக முயற்சிகளில் இறங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் சோனியா காந்தியை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் திடீரென்று சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
No comments:
Post a Comment