அடுத்த ஆண்டு ஏப்ரலில் இருந்து, சமையல் காஸ், கெரசின் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் மானியத்தை ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், சமையல் காஸ் சிலிண்டரின் விலை, 1,000 ரூபாயை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏழை மக்களின் நலன் கருதி, மானியத்துக்கு பதிலாக, அவர்களுக்கு மாதம் தோறும் எரிபொருள் பயன்பாட்டுக்காக உதவித் தொகை அளிக்கவும், அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு, ஏற்கனவே அரசு வசம் இருந்தது. இந்த நடைமுறை, கடந்தாண்டு நீக்கப்பட்டது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை உயர்வுக்கு ஏற்ப, சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயித்துக் கொள்ள, அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, பெட்ரோலின் விலை, தற்போது அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமையல் காஸ், கெரசின் ஆகியவற்றுக்கு, அரசு சார்பில் தொடர்ந்து மானியம் அளிக்கப்படுவதால், அவற்றின் விலை மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. மானிய விலையில் இவற்றை விற்பனை செய்வதால், தங்களுக்கு 67 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் சார்பில், மத்திய அரசிடம் முறையிடப்பட்டுள்ளது. இந்த இழப்பை, சரிக்கட்ட வேண்டுமானால், சமையல் காஸ் மற்றும் கெரசினுக்கு அளிக்கப்படும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு அரசு தரப்பிலும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதற்கான புதிய திட்டமும் தயாராகியுள்ளது. இத்திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தால், சமையல் காஸ், கெரசின் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் மானியம், அடுத்த ஆண்டு ஏப்ரலில் இருந்து, முற்றிலும் ரத்து செய்யப்படும்.
இந்த மானிய ரத்தால், ஏழை மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, அவர்களுக்கு, எரிபொருள் வாங்குவதற்காக, குறிப்பிட்ட அளவு, உதவித் தொகை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. உதவித் தொகையாக எவ்வளவு அளிப்பது என்பது குறித்து, அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மானியம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டால், சமையல் காஸ் சிலிண்டரின் விலை, தற்போதுள்ளதை விட, இரண்டு மடங்கு அதிகரித்து, 1,000 ரூபாயை தொட்டு விடும். அதேபோல், கெரசின் விலை, தற்போதுள்ளதை விட, மூன்று மடங்கு அதிகரிக்கும். இந்த புதிய திட்டம், எரிபொருள் விலை நிர்ணயம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள, மத்திய அமைச்சரவை குழுவின் ஒப்புதல் கிடைத்ததும், அமல் படுத்தப்படும். இந்த குழுவின் கூட்டம், அடுத்த மாதம் 9ம் தேதி நடக்கும்போது, இந்த புதிய திட்டம் குறித்து, விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. இந்த திட்டம் அமலுக்கு வந்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்ப, கெரசினின் விலை, மாதம் தோறும் மாற்றி அமைக்கப்படும். இந்த திட்டம், தங்களுக்கு பெரிய அளவில் பயன் அளிக்கும் என, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment