கொத்தமங்கலத்தில் பாஸ்போர்ட், ஏ.டி.எம் அட்டை, அரசு கடிதங்கள் உள்பட 10 ஆயிரம் கடிதங்கள் குப்பையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொது மக்கள் அஞ்சலகம் முற்றுகையிட்டு சாலை மறியல் செய்தனர்.
கிராம அஞ்சலகம்:
பெருகிவரும் தொலை தொடர்பு தொழில் நுட்பத்தால் அஞ்சலகத்தில் அஞ்சல் சேவைகள் குறைந்து வருகிறது என்று காரணம் சொல்லி பல அஞ்சலகங்களை மத்திய அஞ்சல் துறை மூடுவிழா நடத்தி வருகிறது.
ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள கிளை அஞ்சலகத்தில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி பொது மக்களுக்கு வந்த சுமார் 10 ஆயிரம் கடிதங்கள் போஸ்ட் மேனின் நண்பர் வீட்டு குப்பைகிடங்கில் கிடந்தது அப்பகுதி பொது மக்களை பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
குப்பையில் கடிதங்கள்:
கொத்தமங்கலம் கிளை அஞ்சலகத்தில் அதே ஊரைச் சேர்ந்த போஸ்ட் மாஸ்டராக மாணிக்கம் என்பவரும், போஸ்ட் மேனாக பவானந்தம் என்பவரும் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். நேற்று அதிகாலை பவானந்தம் நண்பர் செல்வமணி என்பவரின் வீட்டுக்கு அருகில் உள்ள குப்பைகிடங்கில் பல ஆயிரம் கடிதங்கள் கிடப்பதைப் பார்த்த பொது மக்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் சிவசாமி , செல்வம் ஆகியோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
கவுன்சிலர்களுடன் முன்னால் ஊராட்சி தலைவர் த. செங்கோடன் மற்றும் கிராம பொதுமக்கள் சென்று அந்த கடிதங்களை வாடிமாநகர் கடைவீதிக்கு 3 சாக்குகளில் கட்டி கொண்டு வந்தனர். கடித மூட்டைகளை சாலையில் வைத்து போஸ்ட் மேன் மற்றும் , போஸ்ட் மாஸ்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் செய்தனர். அங்கு வந்த கீரமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் சமாதானம் செய்து சாலை மறியலை கைவிட செய்தார். பொது மக்கள் அஞ்சலகத்தையும் முற்றுகையிட்டனர்.
அதிகாரிகள் ஆய்வு:
குப்பையில் 10 ஆயிரம் கடிதங்கள் கிடந்த தகவலை மாவட்ட அஞ்சல் அதிகாரிக்கு பொது மக்கள் தெரிவித்தனர்.
11.30 மணிக்கு அஞ்சல் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வராணி, அஞ்சல் புகார் ஆய்வாளர் அனுராதா, அஞ்சல் ஆய்வாளர் மலையப்பன் ஆகியோர் கொத்தமங்கலம் கிளை அஞ்சலகத்திற்க்கு வந்தனர்.
பொதுமக்கள் மூட்டைகளில் கட்டி வைத்திருந்த கடிதங்களை கொட்டி பிரித்து எண்ணினார்கள். அதில் பாஸ்போர்ட், வங்கி கடிதங்கள், ஏ.டி.எம் அட்டைகள் அடங்கிய கடிதங்கள், இன்சூரன்ஸ் கடிதங்கள், இன்சூரன்ஸ் பத்திரங்கள், கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு வந்த கடிதங்கள் , மருந்து பார்சல்கள், புத்தகங்கள், அரசு அலுவலக கடிதங்கள், நீதிமன்ற கடிதங்கள் என்று சுமார் 10 ஆயிரம் கடிதங்கள் இருந்தது.
நடவடிக்கை:
இதை பார்த்த பொது மக்கள் எங்கள் வாழ்க்கையை கெடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை என்று அதிகாரிகளிடம் கேட்டனர். கண்டிப்பாக துறை நடவடிக்கை இருக்கும் என்றார் கண்காணிப்பாளர். அதே இடத்தில் போஸ்ட் மேன் மற்றும் போஸ்ட் மாஸ்டர் ஆகியோரிடம் விசாரணையும் நடந்தது.
விசாரணையில் எனக்கு தெரியாமல் நடந்திருக்கிறது என்று போஸ்ட் மாஸ்டர் மாணிக்கம் தெரிவித்தார். என் நண்பர் செல்வமணி வீட்டில் மட்டும் தான் கடிதங்களை ஒழித்து வைத்திருந்தேன் வேறு எங்கேயும் கடிதங்கள் இல்லை என்று போஸ்ட் மேன் பவானந்தம் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment