சிங்கப்பூரிலிருந்து தனுஷ் சென்னை வருகிறார். வந்த வேகத்திலேயே பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் என்றால், அவர் எந்த நோக்கத்துக்காக சந்தித்தாலும், அவரிடம் கேட்கப்படுகிற கேள்வி ரஜினியை பற்றிதானே இருக்கும்? பிலிம்பேர் விருது தொடர்பாக வந்திருந்த தனுஷை வளைத்து வளைத்து கேள்வி கேட்டார்கள் நிருபர்கள். அதில் பாதிக்கு மேல் ரஜினி பற்றியதுதான். (பேச்சின் இடையில் இணைய தளங்களில் வர்ற செய்திகளை நம்பாதீங்க என்று அவர் கேட்டுக் கொண்டதுதான் பேரதிர்ச்சி. ஏனென்றால் ரஜினி பற்றிய நிஜ தகவல்களை புட்டு புட்டு வைப்பவை இணையதளங்கள்தானே!)
நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பிரஸ்மீட். எடுத்த எடுப்பிலேயே ரஜினி பற்றி பேச ஆரம்பித்தார் தனுஷ். இங்கு வந்திருக்கிற எல்லாருமே ஒரு விஷயத்தை பற்றி தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருப்பீங்க. நீங்க கேட்பதற்கு முன்பே நான் சொல்லிடுறேன். ரஜினி சார் ரொம்ப ஆரோக்கியமா இருக்கார். இன்னும் பத்து நாட்கள் அல்லது ஒரு வாரத்தில் சென்னைக்கு திரும்பிவிடுவார். ராமச்சந்திரா மருத்துவமனையில் அவருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பான சிகிச்சைக்கு நான் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
அவர் மீண்டும் சென்னைக்கு வந்தபின் முன்பு போல் படங்களில் நடிப்பாரா? இது நிருபர்களின் கேள்வி. அதை நீங்க ரஜினி சாரிடம்தான் கேட்கணும். ஆனால் கண்டிப்பா ராணா நடக்கும் என்றார் தனுஷ். ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப் போறதா தகவல்கள் வருதே என்ற கேள்விக்கு, இது நல்ல ஜோக். அப்படியெல்லாம் இல்லை. அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்றார். (அப்புறம் எதற்கு டயலாசிஸ்?)
உங்களுக்கு கிடைத்த தேசிய விருது பற்றி என்ன நினைக்கிறீங்க? இந்த கேள்வியின் போதுதான் தனுஷின் பதிலில் பல உண்மைகள் புரிந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி சார் நல்லபடியாக டிஸ்சார்ஜ் ஆகி வருகிற வரைக்கும் எனக்கு வேறு எந்த சிந்தனைகளும் இல்லை. அவர் நன்றாக உடல் நிலை தேறி திரும்பி வந்ததும்தான் எனக்கு விருது கிடைத்த விஷயத்தையே என் மைண்ட்ல ஏத்துவேன் என்றார் தனுஷ். சற்று முன்புதான் ரஜினி ஆரோக்கியமாக இருக்கிறார். கிரிக்கெட் பார்க்கிறார். சினிமா பார்க்கிறார் என்று கூறிய தனுஷ், இந்த கேள்விக்கு இப்படி பதில் சொன்னதுதான் வேடிக்கை!
கடைசியாக வந்த கேள்வி சற்று விவகாரமானதுதான். ஆடுகளம் படம் தேசிய விருதுக்கு தகுதியானதுதானா? உங்கள் கருத்தென்ன? சட்டென்று உஷாரான தனுஷ், இந்த கேள்வியை நீங்க நடுவர் குழுவிடம்தான் கேட்கணும். ஏன்னா இந்த படத்துக்கு தேசிய விருது கிடைக்குங்கிற அற்ப ஆசையில் நாங்க அனுப்பி வைச்சோம். அவங்களும் தேர்ந்தெடுத்துட்டாங்க. மற்றபடி நான் சொல்றதுக்கு எதுவுமில்லை என்று முடித்துக் கொண்டார்.
No comments:
Post a Comment