திரைப்பட இயக்குனர் சீமான், காதலித்து ஏமாற்றி விட்டதாக புகார் அளித்த நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்,`` நாங்கள் பழகியதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. அதை தேவைப்படும்போது காட்டுவேன்`` என்று போலீசாரிடம் கூறினார்.
``ப்ரண்ட்ஸ்`` ``பாஸ்(எ)பாஸ்கரன்`` உள்பட தமிழ்ப்படங்கள் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி இவர் நேற்று முன்தினம் ``திரைப்பட இயக்குனர் சீமான் என்னை காதலித்து ஏமாற்றி விட்டார்`` என்று சென்னை புறநகர் போலீஸ் கமிஷனரிடத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த புகார் பற்றி வளசரவாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சென்னை புறநகர் பகுதியில் உள்ள வளசரவாக்கம் சௌத்திரி நகர் 1-வது தெருவில் வாடகை வீட்டில், தனது தாய், தங்கையுடன் விஜயலட்சுமி வசித்து வருகிறார். இந்த நிலையில் இந்த வழக்கில் விசாரணை நடத்துவதற்காக, நேற்று மாலை 5 மணிக்கு நடிகையின் வீட்டுக்கு இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், 2 பெண் போலீசாருடன் சென்றார். அவர்கள் 2 மணி நேரம் நடிகையிடம் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையின் போது நடிகை விஜயலட்சுமி கூறியதாவது;- ``வாழ்த்துக்கள்`` படம் மூலம் சீமான் எனக்கு அறிமுகமானார். அதன் பிறகு நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தோம் நாளடைவில் அதுவே எங்களுக்கு இடையே காதலாக மாறிவிட்டது. நாங்கள் அடிக்கடி போனில் பேசுவது மற்றும் ஷூட்டிங் இடங்களில் சகஜமாக பேசி பழகி வந்தோம். சில மாதங்களுக்கு முன்பு, ``நாம் திருமணம் செய்து கொள்ளலாம்`` என்று கூறினேன் அதற்கு அதனை தட்டி கழித்து வந்த சீமான், தற்போது என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து வருகிறார்.
எங்களுக்கு இடையே உள்ள உறவு வெளியுலகிற்கு தெரிய வேண்டும் என்று புகார் அளித்து இருக்கிறேன். இவ்வாறு விஜயலட்சுமி தனது வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். விசாரணையின் போது போலீசார், ``நீங்கள் இருவரும் பழகியதற்கான ஆதாரங்கள் உள்ளதா? என்று கேட்டனர். '`நாங்கள் இருவரும் பழகியதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது`. அதனை தகுந்த நேரம் வரும் போது போலீசாரிடம் காட்டுவேன்`` என்று கூறிய விஜயலட்சுமி கதறி அழுதார்.
போலீசார் நடிகையின் வாக்கு மூலத்தை டேப்பில் பதிவு செய்து கொண்டு வெளியே வந்தனர். அப்போது போலீசாரிடம் நிருபர்கள் கேட்ட போது,`` டேப்பில் நாங்கள் பதிவு செய்து இருக்கும் வாக்குமூலத்தை உயர் அதிகாரிகளிடம் அளிப்போம். அவர்கள் அதை ஆய்வு செய்து விட்டு, மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றி எங்களுக்கு தெரிவிப்பார்கள். அதன்படி நாங்கள் செயல் படுவோம்`` என்று போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில் வளசரவாக்கத்தில் உள்ள சீமான் வீட்டின் முன் அவரது ஆதரவாளர்கள் திரளாக கூடினார்கள். சீமான் மீது பொய்ப்புகார் அளித்த நடிகை, தனது புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். சீமானின் வழக்கறிஞர் தனசேகரன் நிருபர்களிடம் பேசுகையில்,``சீமான் மீது நடிகை பொய் புகார் அளித்து, சீமானின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அவர் மீது ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்படும்``என்று தெரிவித்தார்.
நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் அடிப்படையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் நேற்று இரவு, திருமணம் செய்வதாக ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி மற்றும் கற்பழிப்பு ஆகிய 3 சட்டப் பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்தார். விஜயலட்சுமி கொடுத்த புகார் அடிப்படையில்
இவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், ஆனால், அதில் உண்மை உள்ளதா? என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும், ஏனென்றால் விஜயலட்சுமி தன்னை சீமான் காதலித்ததாகவும், நெருங்கி பழகியதாகவும் சொல்லப்படும் காலக்கட்டத்தில் சீமான் இலங்கை தமிழர்களுக்காக கடுமையான போராட்டக்களத்தில் இருந்துள்ளார். மேலும், அவர் பலமுறை ஜெயிலுக்கும் சென்று வந்துள்ளார் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment